அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து சாலை விபத்து; 2 பேர் படுகாயம்: லாரி மோதியதில் இளம்பெண் கால்கள் நசுங்கியது

கோவை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடி கம்பம் சாய்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உட்பட 2 பேர் காயம் அடைந்தனர். லாரி மோதியதில் அந்த இளம்பெண்ணின் 2 கால்களும் நசுங்கியது. கோவையில் கடந்த 2017ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, அனுமதியின்றி வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி,  அமெரிக்காவில் வேலை பார்க்கும் சாப்ட்வேர் இன்ஜினியர் ரகு(32) பலியானார். இதேபோல்  சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவுக்காக சாலையின் சென்டர் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்தால் ஏற்பட்ட விபத்தில் தண்ணீர் லாரி மோதி சாப்ட்வேர் இன்ஜினியர் சுப பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பெரும்பாலான அரசியல் கட்சியினர் பேனர் வைக்க மாட்டோம் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில்,  கோவையில்  நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைத்திருந்த கொடி கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க நேற்று முன்தினம் அவிநாசி ரோட்டில் பீளமேட்டில் இருந்து பல இடங்களில் சாலையோரமும், சென்டர் மீடியனிலும் அதிமுக கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை கோல்டு வின்ஸ் பகுதியில் சென்டர் மீடியனில் உள்ள மைய தடுப்பு ஓட்டையில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்தது. அவ்வழியாக லாரியை ஓட்டி வந்த டிரைவர், லாரி மீது கொடிக்கம்பம் விழாமல் இருக்க சற்று திருப்பினார். இதில் மொபட்டில் சென்ற ராஜேஸ்வரி (22), பைக் ஓட்டி வந்த நித்யானந்தம் ஆகியோர் மீது லாரி மோதியது. லாரியின் சக்கரம் ராஜேஸ்வரி காலில் ஏறியதில் அவரது இரு கால்களும் நசுங்கியது.  இதேபோல நித்யானந்தமும் காயமடைந்தார். இவர்கள் 2 பேரும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து அஜராக்கிரதையாக வாகனம் ஓட்டியதாக லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். கொடி கம்பம் வைத்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் விட்டு விட்டனர்.

Related Stories:

>