நீர்வரத்து 24,021 கனஅடியாக அதிகரிப்பு ஒரே ஆண்டில் 4வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 24,021 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டில் 4வது முறையாக நேற்று இரவு அணை முழுகொள்ளளவை எட்டியது.கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 14,784 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 24,021 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 14 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடியும் திறந்து விடப்படுகிறது. திறப்பை காட்டிலும், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 119.11 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 119.61 அடியாக உயர்ந்தது.  தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் இந்த ஆண்டில் 4வது முறையாக அணை அதன் முழுகொள்ளளவை (120 அடி) நேற்று இரவு எட்டியது. நீர் இருப்பு 93 டிஎம்சி. அதேபோல், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் 2வது நாளாக நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. இதனால் அங்குள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து, பரிசல் இயக்கவும்,  அருவிகளில் குளிக்கவும் தடை நீடிக்கிறது.

Related Stories: