தர்மம் சிரிக்கிறது

மகாராஷ்டிராவில் பாஜவுக்கு தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறது சிவசேனா. சட்டப்பேரவையின் மொத்த இடம் 289. ஆட்சி அமைக்க தேவையான மேஜிக் நம்பர் 145. பாஜ வென்றது 105 தொகுதிகளில். கூட்டணி கட்சியான சிவசேனா பெற்றது 56. மொத்தம் 161. லட்டு மாதிரி பாஜ ஆட்சி அமைக்கலாம். ஆனால் முடியவில்லை. காரணம் சிவசேனா. ரெண்டரை வருஷம் டர்ன் போட்டு முதல்வர் பதவியை வைத்துக்கொள்ளலாம். அதுதவிர அமைச்சரவையில் சரிபாதி இடம் எங்களுக்கு வேண்டும் என சிவசேனா கண்டிஷன் போட்டது. இதனால் திணறிப்போனது பாஜ. முதல்வர் பதவியை எல்லாம் பங்கிட முடியாது. சமபங்கு ஆட்சியையும் கொடுக்க முடியாது என்பதில் பாஜ திடமாக நின்றது. சிவசேனாவை மெதுவாக கரைத்துவிடலாம் என பாஜ மேலிடம் எண்ணியிருந்தது. ஆனால் சிவசேனாவின் திடமோ பாஜவை விட பத்து மடங்கு அதிகமாக இருந்தது.

 கடைசியில் வேறுவழியின்றி முதல்வர் பதவியை தேவேந்திர பட்னவிஸ் ராஜினாமா செய்தார். சமபங்கு ஆட்சியெல்லாம் கூட்டணி உடன்பாட்டில் சொல்லப்படவே இல்லை என்று அப்போது பட்னவிஸ் கூறினார். உத்தவ் தாக்கரே இதனால் கடும் ஆத்திரமடைந்தார். ‘பட்னவிஸுக்கும் பாஜவுக்கும் வாயைத் திறந்தால் பொய்தான் வருகிறது. இனி அவர்களுடன் பேசப்போவதில்லை. முதல்வர் பதவி தருவதாக இருந்தால் மட்டும் பேச வந்தால் போதும்’ என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால்தான் உத்தவ் தாக்கரேவை திரும்ப திரும்ப பல நாட்கள் பட்னவிஸ் போனில் அழைத்தும் தாக்கரே எடுக்கவே இல்லை. இதை பத்திரிகையாளர் கூட்டத்திலேயே நா தழுதழுக்க உடைந்த குரலில் சொன்னார் பட்னவிஸ். இதனால், ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தும் விருப்பமில்லை என பாஜ மறுத்துவிட்டது. இப்போது அந்த அழைப்பு சிவசேனாவுக்கு போயிருக்கிறது. ...

 ‘சிவசேனா செய்வதெல்லாம் கூட்டணி தர்மமே அல்ல...’ என தேவேந்திர பட்னவிஸ் கூறினார். ஆனால் கோவா, மேகாலயா, மணிப்பூர் மாநிலங்களில் எல்லாம் பாஜ செய்தது என்ன தர்மத்தில் வரும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேகாலயாவில் 31 எம்எல்ஏக்கள் இருந்தால் ஆட்சி அமைக்கலாம். காங்கிரஸ் கூட்டணி 21 இடங்களை வைத்திருந்தது. பத்து இடங்கள்தான் தேவை. மாறாக பாஜ வெற்றி பெற்றது வெறும் 2 தொகுதிகளில்தான். ஆனால் பல தகிடுதத்தங்களில் எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டனர். கோவாவிலோ காங்கிரஸ் கூட்டணி கட்சியை ஒட்டுமொத்தமாக வளைத்துப்பிடித்தார்கள். மணிப்பூரிலும் இதே நிலை. இந்த சாகசங்களுக்கு எல்லாம் அமித்ஷாவின் மேஜிக் என பெயர்வைத்தார்கள். கூட்டணியின் தர்மம் பற்றி அப்போது பாஜ நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்போது மகாராஷ்டிராவில் நிலைமை தலைகீழாகக் கிடக்கிறது. அமித்ஷாவின் மேஜிக் எடுபடவில்லை. கூட்டணியின் தர்மம் அவர்களை பார்த்து சிரிக்கிறது.

Related Stories: