காற்று மாசால் இதய பாதிப்பு பக்கவாதம் வரும் ஆபத்து: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: காற்று மாசால் இதய பாதிப்பு, பக்கவாதம் வரும் ஆபத்து உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.டெல்லியில் காற்று மாசு மிக, மிக அபாயக்கட்டத்தை எட்டியுள்ளது. நுண்துகள் அளவுகள் காற்றில் அதிகரித்துள்ளன. இவை பனியுடன் சேர்ந்துள்ளதால், புகை மண்டலம் சூழ்ந்தது போன்று காணப்படுகிறது. தலைநகரை சுற்றியுள்ள  மாநிலங்களில், அறுவடை முடிந்த விவசாய நிலங்களில் தீ வைக்கப்படுவதால், அதில் இருந்து கிளம்பும் புகையும் தலைநகர் டெல்லியை வந்தடைந்து காற்றில் கலந்து நிற்கிறது. இதை தடுக்க டெல்லி மாநில அரசு பல நடவடிக்கைகள் எடுத்தும்  முடியவில்லை.இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாய நிலங்களில் தீ வைப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், விவசாய கழிவுகளை  ஏன் அரசே கொள்முதல் செய்து, பாதுகாப்பாக அகற்றக்கூடாது என்று விளக்கம் அளிக்கக் கோரி உத்தரவிட்டுள்ளது.மேலும், டெல்லியில் வாகன புகையை கட்டுப்படுத்துவதற்காக ஒற்றை மற்றும் இரட்டை இலக்க பதிவெண் கொண்ட கார்களை மாற்று நாட்களில் இயக்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவுக்கு பின்னரும் நேற்றும்  டெல்லியில் காற்று மாசு மிக அபாயகரமான நிலையில் இருந்தது. அதாவது மாசு அளவு 500 புள்ளிகளாக இருந்தது. இது வழக்கமான அளவை விட ஐந்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

இந்நிலையில், இந்தியாவில் காற்று மாசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, ஸ்பெயின் நாட்டின் உள்ள உலக சுகாதார பார்சிலோனா அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. முதல்கட்டமாக ஐதராபாத் மற்றும் தெலங்கானாவின் புறநகர் பகுதிகளை ஒட்டிய இடங்களில் மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், காற்று மாசால், பக்கவாதம் அல்லது இதய பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பது  தெரியவந்தது. காற்றில் உள்ள நுண்துகள்கள் சுவாசத்தின் வழியே உடலினுள் செல்லும்போது, இதயத்தமனிகள் தடிமன் அடைகின்றன. இதுபோன்ற பாதிப்பு காற்று மாசால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த மக்களிடம் அதிகம் இருந்தது. மேலும்,  இந்த பாதிப்பு 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதிகம் இருந்தது. குறிப்பாக ஆண்களிடம் அதிகம் இருந்தது. மேலும், பழங்கால முறைப்படி விறகு அடுப்புகளை பயன்படுத்தும் பெண்களிடம் அதிகம் இருந்தது.இந்த பாதிப்புகள் மட்டுமின்றி, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்ற ஆபத்துகளும் மக்களிடம் இருந்தது தெரியவந்தது.காற்று மாசு குறைவாக உள்ள ஐதராபாத்திலேயே இந்த நிலை என்றால், டெல்லி மற்றும் சென்னையில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

Related Stories: