தமிழகத்தில் நடப்பது ஆட்சி என்று சொல்லக்கூடாது மத்தியஅரசின் அடிமை ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது ஆட்சி என்று சொல்லக்கூடாது. மத்திய அரசின் அடிமை ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கே.எஸ்.வெல்டிங்மணி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:அண்ணா, இந்த இயக்கத்தைத் தொடங்கிய நேரத்தில், “திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, ஒரு குடும்பப் பாச உணர்வோடு உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று எடுத்துச் சொல்லி இருக்கிறார். அந்தப் பாச உணர்வோடுதான் இன்றைக்கு  நாமெல்லாம் இந்த விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும், பத்திரிகை ஊடகங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது ஆட்சி என்று சொல்லக்கூடாது. மத்திய அரசின் அடிமை ஆட்சி  என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் சாலை போடுவதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் மத்திய அரசு 5,000 கோடி அனுப்பியதாகவும், அந்த நிதியைப் பயன்படுத்தாததால், மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி  உள்ளது. என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால், சாலை போடுவதில் கமிஷன் வாங்க திட்டமிட்டுள்ளார்கள். அது மறுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அந்தப் பணம் திருப்பி அனுப்பப்பட்டுள்ள கொடுமை நடந்துள்ளது.எல்லா துறையிலுமே நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்த ஆட்சியைப் பொறுத்தவரை கமிஷன், கரப்ஷன், கலெக்சன் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே 9 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு மக்கள் இந்தக் கொடுமையை அனுபவித்துக்  கொண்டிருக்கிறார்கள்.இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது. அதை தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. ஏற்கனவே, எந்தத் தேர்தலாக இருந்தாலும் வெல்டிங்மணி போன்ற தோழர்கள் முனைப்புடன் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அதேபோல், எதிர் வரும் தேர்தல்களிலும் உங்கள் பணிகள் இருந்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: