தமிழகம் - கேரளா இடையிலான முல்லைப்பெரியாறு அணை குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பிக்க தீவிர நடவடிக்கை: பினராய் விஜயன் தகவல்

திருவனந்புரம்: தமிழகம்- கேரளா இடையிலான முல்லைப்பெரியாறு அணை குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக ேமற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கேரள சட்டசபையில் முதல்வர் பினராய் விஜயன்  கூறினார்.கேரள சட்டசபையில் ேநற்று கேள்வி நேரத்தின்போது தமிழகம் - கேரளா இடையே பரம்பிக்குளம் - ஆழியார் உட்பட நதி நீர் ஒப்பந்தங்களில் கேரளாவின் நலனை பாதுகாக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும்  என்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஷர்மா கேள்வி எழுப்பினார்.அதற்கு முதல்வர் பினராய் விஜயன் அளித்த பதில்: பரம்பிக்குளம் - ஆழியார் ஒப்பந்தப்படி கேரளாவிற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 30 ஆண்டுகளுக்கு பரம்பிக்குளம் -  ஆழியார் நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று 1958ல் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி 1988ல் ஒப்பந்தம் மறு பரிசீலனை செய்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு கட்டங்களிலாக அதிகாரிகள் மட்டத்திலும் அமைச்சர்கள் மட்டத்திலும் முதல்வர்கள் மட்டத்திலும் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் எந்த  தீர்வும் ஏற்படவில்லை. ஆனால் கடந்த செப்டம்பர் 25ம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த தமிழக- கேரள முதல்வர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் பரம்பிக்குளம்- ஆழியார் ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.இது தொடர்பாக இரு மாநிலங்களின் துறை செயலாளர்கள் தலைமையில் 5 உறுப்பினர்கள் கொண்ட கமிட்டி அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முல்லை பெரியாறு அணைக்கு மீண்டும்  மின்சாரம் வழங்க கேரள மின்வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முல்லை பெரியாறில் தமிழகம்- ேகரளா இடையே குத்தகை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அணைக்கு  ஆபத்து இருப்பதாக கூறி யாரும் வீண் பீதியை கிளப்ப வேண்டாம். அணை அருகே வசிப்பவர்களை வேறு இடங்களுக்கு மாற்றும் அவசியமும் தற்ேபாது இல்லை. பம்பை- அச்சன் கோயில் - வைப்பார் நதிகளை இணைக்க கேரளா ஒருபோதும்  சம்மதிக்காது.

Related Stories:

>