சைக்கிளுக்கு காற்றுப்பிடித்ததற்கு இரண்டு ரூபாய் தர மறுத்தவர் அடித்து கொலை; 2 பேர் கைது

திருமலை: ஆந்திராவின் காக்கிநாடா புறநகர் பகுதியில் உள்ள வலசபாக்கா கிராமத்தை சேர்ந்தவர் சூரிய நாராயண ராஜூ. இவர் நேற்று தனது சைக்கிளில் வெளியில் சென்றார். அப்போது சைக்கிளின் 2 டயர்களிலும் காற்று குறைவாக  இருந்ததால் அதே பகுதியில் உள்ள சாம்பா என்பவரது சைக்கிள் கடைக்கு சென்று தனது சைக்கிள் டயர்களுக்கு காற்று பிடிக்கும்படி கூறினார்.    அதன்படி சூரியநாராயண ராஜூவின் சைக்கிளுக்கு சாம்பா காற்று பிடித்துள்ளார். இதையடுத்து சாம்பா, சூரியநாராயண ராஜூவிடம் காற்று பிடித்தற்கு 2 ரூபாய் பணம் கேட்டார். அப்போது, சூரிய நாராயண ராஜூ பணம் தர மறுத்தாராம். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூரியநாராயண ராஜூ சாம்பாவை அடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த சாம்பாவின் நண்பர் அப்பாராவ் சைக்கிளில் காற்று பிடித்துக் கொண்டு அதற்கான பணத்தை கேட்டால் அடிக்கிறாயா என்று கோபத்தில் கடையில் இருந்த இரும்பு ராடை கொண்டு சூரிய நாராயண  ராஜூவை தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த சூரியநாராயண ராஜூவை அங்கிருந்தவர்கள் மீட்டு காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சூரிய நாராயண ராஜூ உயிரிழந்தார். இதுகுறித்து காக்கிநாடா ரூரல் போலீசார் வழக்குப்பதிந்து சாம்பா, அப்பாராவ் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சைக்கிளுக்கு காற்று பிடிப்பதற்கு ₹2 பணம் கேட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : breeze , bicycle, two rupees, arrested
× RELATED சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் போட்டி