அயோத்தி வழக்கு தீர்ப்பு 17ம் தேதி முஸ்லிம் சட்ட வாரியம் மறுபரிசீலனை மனு பற்றி முடிவு: மூத்த வக்கீல் ஜிலானி தகவல்

புதுடெல்லி: ‘‘அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோருவதா, வேண்டாமா என  வரும் 17ம் தேதி நடைபெறும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’’ என  முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜிலானி தெரிவித்தார். அயோத்தி வழக்கில் கடந்த 9ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வழங்கும்படியும்  உத்தரவிட்டது.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜிலானியிடம், ‘‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்வீர்களா?’’ என நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜிலானி, ‘‘மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்வதா, வேண்டாமா என்பது குறித்து வரும் 17ம் தேதி நடக்கும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய (ஏஐஎம்பிஎல்பி) கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: