சட்டீஸ்கரில் குடும்பத்தினர் தஞ்சம் மாவோயிஸ்ட் தீபக் வாக்குமூலம்

கோவை: கோவை ஆனைகட்டி மூலகங்கன் வனப்பகுதியில் கடந்த 9ம் தேதி சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக் (32) பிடிபட்டார். இவர், மாவோயிஸ்ட் கொரில்லா ஆர்மியின் மத்திய குழு உறுப்பினர். இவர் மீது தடாகம் போலீஸ் ஸ்டேஷனில் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் (உபா) உள்ளிட்ட 7 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபக்கின் இடது காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரை போலீசார் நேற்று மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிபதி சக்திவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை, வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். தீபக்கிற்கு சிகிச்சை அவசியம் தேவைப்படுவதால், கோவை சிறைக்கு கொண்டு செல்லாமல், கோவை அரசு மருத்துவமனையின் சிறைவாசிகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக தீபக்கிடம், தடாகம் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் சஜகமாக பேச்சு கொடுத்தனர். விசாரணையின்போதும், முதல் தகவல் அறிக்கை தயார் செய்தபோதும் பேசாமல் அமைதியாக இருந்த தீபக், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். தன் மனைவி பெயர் ஷர்மிளா எனவும், குழந்தை பெயர் கன்னியாகுமரி எனவும் கூறினார். ஷர்மிளா, குழந்தை எங்கே? என போலீசார் கேட்டபோது, அவர் கூறியதாவது:

அவங்க எங்கே இருக்காங்கன்னு சொல்லமாட்டேன்,பெத்தவங்க, சொந்தக்காரங்க சட்டீஸ்கர்ல இருக்காங்க, நீங்க தேடி போனாலும் அவங்கள கண்டுபிடிக்க முடியாது, அவங்க இயக்கத்தில இருக்காங்களான்னு நான் சொல்ல மாட்டேன். 2010ம் வருஷம் சட்டீஸ்கர்ல என் செயல்பாடு புடிக்காம போலீஸ்காரங்க நெருக்கடி தந்தாங்க. அங்க இருந்து தப்பி, கேரளா வந்தேன். கேரளாவில் எனக்கு நிறைய நண்பர் கூட்டம் இருக்கு. அரசியல் கட்சி சார்ந்தவங்க, சாராதவங்க என பார்த்து பழகவில்லை. மக்களை பாதிக்கிற, அவங்கள சுரண்டுற சக்திகளை நாங்க எதிர்க்கிறோம். உரத்த குரலில் போராடுகிறோம், பல கிராமங்களுக்கு சென்று, பல தடவை ஜனங்கள சந்திச்சு, மனம் விட்டு பேசினோம். அவங்களுக்கு ஆதரவா நாங்க இருக்கோம், எங்கள, எந்த ஜனங்களும் காட்டிக்கொடுக்கல... இவ்வாறு மாவோயிஸ்ட் தீபக் கூறினார்.

 

கடந்த 28ம் தேதி மஞ்சகண்டி வனத்தில் என்ன நடந்தது? உயிர் பிழைத்தது எப்படி? என போலீசார் தீபக்கிடம் கேட்டபோது, ‘‘துப்பாக்கி சூடு நடந்தப்ப நாங்க தனித்தனியாக பிரிஞ்சு தப்பிச்சுட்டோம், நான், ஒரு பையுடன் தப்பிச்சேன். 15 கி.மீ. தூரம் காட்டுக்குள்ள எந்த இடத்திலும் நிக்காம ஓடினேன். என் கிட்ட செல்போன் இருந்துச்சு, அதுல ரூட் மேப், வழிகாட்டி இருந்துச்சு. நான் மேடு பள்ளம் தாண்டி ஓடுறப்ப செல்போன் கீழே விழுந்துருச்சு, அது எங்கேன்னு தெரியல. தமிழ்நாடு வனத்திற்குள் நான் வந்துட்டேன்னு தெரிஞ்சுக்கிட்டேன். காட்டை விட்டு வெளியே ஊருக்குள்ள போயி, வைத்தியம் பார்க்கலாம்னு நெனைச்சேன், அதுக்குள்ள சிக்கிவிட்டேன்’’ எனக் கூறினார்.

Related Stories: