அதிமுகவில் அரசியல் வெற்றிடம் என்பதே இல்லை ரஜினி நடிகர்தான் கட்சி ஆரம்பிக்கவில்லை : முதல்வர் எடப்பாடி பதிலடி

கோவை: அதிமுகவில் அரசியல் வெற்றிடம் என்பதே இல்லை, ரஜினி நடிகர்தான், அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: அ.தி.மு.க.வில் அரசியல் வெற்றிடம் என்பதே இல்லை. சமீபத்தில் நடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைதேர்தல் வெற்றி இதை நிரூபித்து விட்டது. அ.ம.மு.க. புகழேந்தி அ.தி.மு.க.வில் இணைய கடிதம் கொடுத்தால் அதுபற்றி  தலைமைக்கழகம் பரிசீலிக்கும். உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கவேண்டும். அது ஒரு தன்னாட்சி அமைப்பு. தேர்தல் ஆணையத்தினர் விரைவாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இடம்பெற்ற அதே அ.தி.மு.க. கூட்டணி, வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். அ.தி.மு.க.வின் வெற்றி பிரகாசமாக உள்ளது.

சென்னையில் மாசு பிரச்னை தொடர்பாக வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் ஏற்கனவே விளக்கமாக சொல்லிவிட்டார். மகாபலிபுரம், தொல்லியல் துறை வசம் இருக்கிறது. அந்த பகுதி அழகாக மாற்றப்படும். மத்திய-மாநில அரசு இணைந்து நடவடிக்கை எடுக்கும். அந்த பகுதி பெரிய சுற்றுலா தலமாக மாற்றப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார். இதன்பின்னர், தமிழக அரசியல் வெற்றிடம் பற்றி ரஜினிகாந்த் கூறியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘ரஜினி ஒரு நடிகர், அவர் கட்சி ஆரம்பிச்சிட்டாரா?, கட்சி தலைவரா?, அவர் அரசியல் கட்சி தலைவர்னு யாராவது சொல்லியிருக்காங்களா?, அப்புறம் அதைப்பற்றி ஏன் பேசவேண்டும்?. நான், பொதுக்கூட்டத்திலும் இதைப்பற்றி விளக்கிவிட்டேன் என்றார்.

Related Stories: