மதுவிற்பனை நேரத்தில் மேற்பார்வையாளர்கள் பணியில் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை

சென்னை : டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார்  வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: அனைத்து டாஸ்மாக் கடையில் அதிகம் விற்பனையாகும் நேரமான மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மேற்பார்வையாளர்கள் கண்டிப்பாக கடையில் இருக்க வேண்டும். பணியில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த கடையில் பணிபுரியும் அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் விளக்கம் கேட்கும் குறிப்பானை வழங்கப்பட வேண்டும். மேலும் சில்லறை விற்பனை கடையில் இரண்டாவது முறையாக  பணியில் இல்லாத குறிப்பிட்ட மேற்பார்வையாளரை விற்பனை குறைவான கடைக்கு பணிமாறுதல் செய்திட முதுநிலை மண்டல மேலாளருக்கு முன்மொழி அனுப்பிட வேண்டும் என்று தலைமை அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி,  மாவட்ட மேலாளர்களால் மதுபான கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா? அவ்வாறு ஆய்வின்போது மேற்பார்வையாளர்கள் மாலை நேரங்களில் கடைகளில் இருந்தனரா, இல்லாத பட்சத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று ஆய்வின் விவரத்தை தலைமை அலுவலகத்திற்கு மாவட்ட மேலாளர்கள் மாதம்வாரியாக அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும் தொகுத்து அனுப்ப வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: