சென்னை மண்டலத்தில் உள்ள கோயில்களில் கரன்சி கைமாறியதால் விதிமுறை மீறி ஊழியர்கள் நியமனம்

* கேள்வி எழுப்பும் ஊழியர்கள் சஸ்பெண்ட்

* கமிஷனரிடம் குவியும் புகார்

சென்னை : லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு கோயில்களில் விதிமுறை மீறி ஊழியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதை தட்டிக்கேட்கும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில், சென்னை மண்டலத்தில் மட்டும் மருந்தீஸ்வரர், அங்காள பரமேஸ்வரி, முண்டககண்ணியம்மன், திருவாலீஸ்வரர் உட்பட 3 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் நிர்வாகத்தின் மீது பல்வேறு முறைகேடுகள் புகார்கள் எழுந்துள்ளது. ஆனால், இது தொடர்பாக ஆணையர் அலுவலகம் தற்போது போது உரிய விசரணை நடத்தவில்லை. குறிப்பாக, ஒவ்வொரு கோயில்களில் காலி பணியிடங்களில் அலுவலக வேலைக்கு பணியமர்த்தினால் அதற்காக தக்கார் தீர்மானமோ, இலாகாவின் முன் அனுமதியோ பெற வேண்டும். ஆனால், பல கோயில்களில் எந்த வித முன்அனுமதியும் பெறாமல் ஊழியர்கள் நியமிக்கப்படடுள்ளனர். குறிப்பாக, கடந்த சில மாதங்களில் மட்டும் 150 பேர் வரை இப்படி நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், சமீபத்தில் அண்ணா நகர் திருமேனியம்மன் கோயில், புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர், வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் ஆலயம், வில்லிவாக்கம் பாலியம்மன் கோயிலில் ரூ.3 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு அலுவலக வேலைக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அங்கிருக்கும் ஊழியர்கள் கேள்வி எழுப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் ஊழியர் ஒருவர் தட்டிக்கேட்டதால் அவரை பணி நீக்கம் செய்துள்ளது.

தொடர்ந்து அந்த கோயிலின் நிர்வாக அதிகாரியும் அங்கிருந்து தூக்கியடிக்கப்பட்டார். அதே போன்று வில்லிவாக்கம் பாலியம்மன் கோயில், திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது அந்த பணியிடத்துக்கு வேறொரு நபர் நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் முகப்பேர் சந்தான சீனிவாச பெருமாள் கோயில் நிதியில் லட்சக்கணக்கில் முறைகேடுகள் செய்த அதிகாரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், அவரை தற்போது புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோயிலில் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இதற்காக, லட்சக்கணக்கில் பணம் கைமாறியிருப்பதாக கூறப்படுகிறது. வில்லிவாக்கம் பாலியம்மன் கோயிலில் கோயில் கட்டிட வாடகை தொடர்பாக வாடகைதாரருக்கு ஆதரவாக செயல்படவில்லை எனக்கூறி அங்கு பணியில் இருந்த ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில், சென்னை மண்டலத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களில் வாடகைதாரர்கள் கட்டிடத்தை புதுப்பித்துகொள்ள அனுமதி கேட்கின்றனர். இதற்குவேலைக்கேற்ப ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் பெற்று கொண்டு வாடகைதாரர் கட்டிடம் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. தொடர்ந்து, சென்னையில் உள்ள நிதிவசதி அதிகம் உள்ள கோயில்களின் நிர்வாக அதிகாரிகள் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை லஞ்சமாக பராமரிப்பு நிதியில் இருந்து தரப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டிக்கு புகார் சென்றுள்ளது. ஆனால், அந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Related Stories:

>