சென்னையில் 8வது நாளாக காற்று மாசு அதிகரிப்பு

* கொடுங்கையூரில் உச்சத்தை தொட்டது

* கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கை என்ன?

சென்னை: சென்னையில் 8வது நாளாக காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு கட்டுப்பாடு விதிப்பதில் காலம் தாழ்த்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகரில் ஒவ்வொரு நாளும் காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி டெல்லியை காட்டிலும் சென்னையில் காற்று மாசு அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து காற்று மாசுவை கட்டுப்படுத்த புதுடெல்லியை போன்று கட்டுபாடுகள் விதிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையில் காற்று மாசு இல்லை என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வந்தது. இந்த நிலையில் சென்னையில் காற்று மாசு குறையாத நிலையில், ஆஸ்துமா, இதயம், நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் எச்சரித்தனர். இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக காற்று மாசு ஏற்பட்டது உண்மை தான். அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் நேற்று கூறியுள்ளார். மேலும், அவர், கடந்த 7 நாட்களாக காற்று மாசு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் தற்போது வரை தமிழக அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், 8வது நாளாக சென்னை முழுவதும் காற்று தரக் குறியீடு சுவாசிக்க பாதுகாப்பற்ற அளவை எட்டியுள்ளது. தமிழகத்தில் வடக்கிலிருந்து காற்று வீசுவதால் அங்குள்ள மாசுக்கள் அனைத்தும் வட தமிழகத்தை நோக்கி வந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக சென்னை முழுவதும் பனியும் புகையும் சேர்ந்து காணப்பட்டது. காற்றுத் தரக் குறியீட்டை பொறுத்தவரையில் சென்னையில் உள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மற்றும் தனியார் காற்று மாசு நிகழ் நேர கண்காணிப்பு மையங்களில் சுவாசிக்கத் தகுந்த அளவான 100 என்பதை விட அதிகமாக காற்று மாசுபாடு  பதிவாகியுள்ளது. நேற்று காலை 7மணி  நிலவரப்படி காற்று தரக் குறியீடானது மணலியில் 128, கொடுங்கையூரில் 418, அண்ணா நகரில் 293, ராமாவரத்தில் 159, ஆலந்தூரில் 235, வேளச்சேரியில்  262, கோவிலம்பாக்கத்தில் 197 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதில், கொடுங்கையூரில் மிகவும் அதிகமாக காற்று மாசு பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் மற்ற இடங்களில் மோசமாக இருப்பதாக மத்திய மாசுகட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி டெல்லியில் 360 ஆகவும், பரிதாபாத் 341ம், நொய்டா 371ம், பானிபட் 425 ஆக காற்று மாசு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் வடக்கில் இருந்து காற்று வீசும் நிலையில் சென்னையில் காற்று மாசு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, காற்று மாசால் சென்னையில் மோசமான கால சூழ்நிலை ஏற்படுவதற்குள் உரிய கட்டுபாடுகளை விதிக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: