×

சிவசேனாவுக்கு ஆளுநர் மறுப்பு; பவார் கட்சிக்கு அழைப்பு மகாராஷ்டிராவில் உச்சகட்ட குழப்பம் : காங்கிரஸ் ஆதரவுடன் புது ஆட்சி அமையுமா?

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவை பெற சிவசேனாவுக்கு கூடுதல் நேரம் வழங்க மறுத்த ஆளுநர், 3வது பெரிய கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் காரணமாக, மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட குழப்பநிலை நீடிக்கிறது. காங்கிரசின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமையுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பா.ஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 44 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின. பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருந்தும் முதல்வர் பதவி பிரச்னை காரணமாக இந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.  முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதம் காட்டியது. ஆனால் பா.ஜ அதற்கு மறுத்துவிட்டது.

இந்த நிலையில், மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பெரும் கட்சியான பாஜ.வை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய பலம் இல்லாததால் பாஜ அதற்கு மறுத்து விட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது நேற்று இரவு 7.30 மணிக்குள் முடிவை தெரிவிக்கும்படியும் ஆளுநர் கூறியிருந்தார். சிவசேனாவிடம் 56 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெற அக்கட்சி திட்டமிட்டது. முதல்கட்டமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை உத்தவ் தாக்கரே சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது காங்கிரஸ் எடுக்கும் முடிவை பொறுத்துதான் ஆதரவு தருவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று சரத் பவார் கூறினார்.

இதற்கிடையே, சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுப்பதற்காக டெல்லியில் காங்கிரஸ் உயர்நிலை கமிட்டி கூட்டம் நேற்று காலையில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. ஆனால் காலையில் எந்த முடிவும் எடுக்கப்படாததால் மாலை 4 மணிக்கு மீண்டும் கூடி முடிவு எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி மாலையில் மீண்டும் உயர்நிலை கமிட்டி கூடியது. சோனியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, அகமது பட்டேல், மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இதற்கிடையே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில்  சோனியா காந்தியை தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். சிவசேனாவுக்கு ஆதரவு தருவது குறித்து கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசுடன் மேற்கொண்டு விவாதிப்பது என காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, சிவசேனா சட்டப்பேரவை கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோர் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்திக்க சென்றனர். ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு சிவசேனாவுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் மாலை 7.30 மணியுடன் முடிந்த நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் சிவசேனா தரப்பில் தரப்படவில்லை. இதனால், அவர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க முடியாது’’ என கூறப்பட்டிருந்தது.

இதனால் ஆட்சி அமைக்கும் சிவசேனாவின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆளுநரை சந்தித்த பிறகு ராஜ்பவனுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ஆதித்யா தாக்கரே, சிவசேனா தலைமையிலான அரசு அமைக்க காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளதால் ஆட்சி அமைக்க தாங்கள் உரிமை கோரியது செல்லுபடியாகும் என்று தெரிவித்தார். ஆதரவு கடிதங்களை பெற கூடுதல் கால அவகாசம் வழங்க ஆளுநர் மறுத்து விட்டதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில், இரவு 8.30 மணி அளவில், 3வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் அஜித்பவாருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாமல், கூட்டணியும் உறுதியாகாமல் இருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடித்து வருகிறது. யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டம் மீண்டும் இன்று கூட உள்ளது. இதனால் காங்கிரஸ் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமையுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவசேனா கனவு இனி பலிக்குமா?

1 மகாராஷ்டிராவில் பாஜவுடன் அணி சேர்ந்து போட்டியிட்டு வென்ற சிவசேனா, ஆட்சியில் சம பங்கு கேட்டதால் குழப்பம் துவங்கியது.
2 அதிக இடங்களை பெற்ற பாஜவை அழைத்தார் கவர்னர்; ஆனால் தங்களுக்கு போதுமான இடங்கள் இல்லை என பாஜ மறுத்துவிட்டது.
3 இதையடுத்து சிவசேனா கட்சி, ஆட்சி அமைக்க பவார் கட்சி மற்றும் காங்கிரசுடன் பேச்சு நடத்தியது.
4 பவார் வீட்டுக்கு சென்று பேசினார் உத்தவ் தாக்கரே; சோனியாவுடன் போனில் பேசினார்.
5 நேற்று சிவசேனாவை அழைத்த கவர்னர், போதுமான ஆதரவு கடிதம் இல்லை என்பதால் அவகாசம் தர முடியாது என கைவிரித்தார்.
6 இதையடுத்து மூன்றாவது பெரிய கட்சியான பவார் கட்சியை அழைத்து, ஆட்சி அமைக்க 24 மணி நேர அவகாசம் அளித்தார் கவர்னர்.
7 கவர்னர் செயலால் சிவசேனாவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பறிபோனதாக தெரிகிறது.
8 இன்று பவார் கட்சிக்கு காங் ஆதரவு தருமா? புது ஆட்சி அமையுமா? என்ற கேள்விகளுக்கு விடை தெரியும்.

Tags : Governor's Refusal , Shiv Sena; Calling Pawar party climax ,Maharashtra
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்