×

தமிழகம் முழுவதும் வருகிற 16ம் தேதி முதல் திமுக பொதுக்குழு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்

* மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தமிழகம் முழுவதும் வருகிற 16ம் தேதி முதல் திமுக பொதுக்குழு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதாவது, அடிப்படை பண்புகளுக்கு ஊரு நேராமல் அரசியல் சட்டத்தை மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும். அத்துடன், உள்ளாட்சி தேர்தலை நடத்துவது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி மற்றும் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சன் உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: நேற்றைய முன்தினம் (10ம் தேதி), நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில்,  தமிழக வரலாற்றின் இருண்ட காலம் என்று சொல்லுமளவுக்கு, பகல் கொள்ளை-உளுத்துப் போன ஊழல்-எதற்கும் லஞ்சம்-எங்கும் கமிஷன் என்று, அவமானகரமான ஆட்சி ஒன்றை நடத்தி வரும் அதிமுக அரசையும் மற்றும் அது தனது அடிவருடும் ஆட்சி என்பதால், அதற்கு அனைத்து வகையிலும் பலத்த பாதுகாப்பு அளித்துவரும் மத்திய பாஜக அரசுக்கு  கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட,  20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தத் தீர்மானங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று விளக்கிட, தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும், மிகச் சிறப்பான பயனளித்திடும் வகையில், நவம்பர் 16ம் தேதி (சனிக்கிழமை) திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்திட மாவட்டச் செயலாளர்களின் இந்தக்  கூட்டம் தீர்மானிக்கிறது.

மேற்கண்ட 20  தீர்மானங்களில் குறிப்பாக, “பொய்களைச் சொல்லியே பொழுது போக்கி, இரட்டை வேடம் போடும் அதிமுக”, “ஊழலின் ஊற்றுக்கண்ணாகத்  திகழும் அதிமுக ஆட்சி”, “ஊழலில் திளைக்கும் அதிமுக அமைச்சர்களின் மீதான வருமான வரித்துறை ரெய்டு-உரிய விசாரணை நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் மத்திய பாஜக அரசு”,  “மத்திய பாஜக அரசின் தமிழக விரோத திட்டங்களுக்கு துணைபோகும் அதிமுக அரசு” ஆகிய  தீர்மானங்களை, மக்கள் மனங்களில் ஆழப் பதிந்திடும் வண்ணம், துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்து, தமிழகம் முழுவதும் ஊர்கள்தோறும் விநியோகித்திட ஆவன செய்வதென்றும்; தீர்மானங்களை விளக்கி எளிய முறையில் திண்ணைகள் தோறும்  பிரசாரங்கள் மேற்கொள்வதென்றும்; திமுக மாவட்டச் செயலாளர்களின் இந்தக்  கூட்டம் தீர்மானிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : meeting ,DMK , DMK should hold , public meeting ,resolution from the 16th
× RELATED கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்