ஆர்டிஓ அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை புதிய மோட்டார் வாகனச்சட்டம் அமல்படுத்த அதிகாரிகள் தயக்கம்

* சிறப்பு செய்தி

ஆர்டிஓ அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள ஊழியர்கள் பற்றாக்குறையால், புதிய மோட்டார் வாகனச்சட்டத்தை அமல்படுத்துவதில், அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் செயல்பாட்டில் இருந்த மோட்டார் வாகனச்சட்டம் மிகவும் பழமையானது எனக்கூறி, மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா தயாரிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில், பல்வேறு பிரிவுகளில் ஏராளமான மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில், 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் ரூ.10,000 விதிக்கப்படும்.  மேலும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக குறைந்தபட்ச கல்வித்தகுதி நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓட்டுனர் பணி செய்வோர் பயணடைவார்கள். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.500 முதல் ரூ.5,000 வரை விதிக்கப்படும். இந்த சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் செயல்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு விதிமுறைகளுக்கான அபராதம் அதிகமாக இருப்பதே காரணம். எனவே இதுவரை சம்பந்தப்பட்ட சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படவில்லை.

இதேபோல், ஆர்டிஓ அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களும், புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டுவருவதில், அதிகாரிகளிடத்தில் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த பிரச்னைகள் தொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகங்கள் உள்ளன. இதுதவிர 60க்கும் மேற்பட்ட யூனிட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறுகின்றனர். சராசரியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக தங்களது வாகனங்களை பதிவு செய்கின்றனர். இதுதவிர பதிவு எண் வழங்குதல், பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஏராளமானோர் வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் நீண்ட நாட்களாக பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. மத்திய அரசின் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் மேலும் பணிச்சுமை அதிகரிக்கும். அதாவது தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும், லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

அவ்வாறு விண்ணப்பிக்கும் போது லைசென்ஸ் பெறுவதற்கு அலுவலகத்திற்கு விண்ணப்பதாரர் வர வேண்டும். இதேபோன்ற நடைமுறையே பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கும் உள்ளது. சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் பிற இடங்களை சேர்ந்த மக்கள் ஏராளமாக வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் ஆன்லைனில் விண்ணப்பித்து விட்டு, ஆர்டிஓ அலுவலகத்திற்கு வருவார்கள். அப்போது பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் மூலம், விண்ணப்பதாரர் வசிக்கும் இடத்திலுள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>