உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்க தயார் திமுகவில் 14ம் தேதி முதல் மனுக்களை கொடுக்கலாம் : சென்னையில் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்க தயார் என்றும், திமுகவில் போட்டியிட விரும்புகிறவர்கள் 14ம் தேதி முதல் மனுக்களை கொடுக்கலாம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நேற்றைய முன்தினம் நடைபெற்ற, திமுக இதயமாக விளங்கும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற அந்த நிலையில், வரும் 16ம் தேதி,  தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் ‘திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள்’ நடைபெற இருக்கின்றன. அந்தக் கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டும் என்று, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக, தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்குரிய விண்ணப்பப் படிவங்களை வழங்குவது குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எது எப்படி இருப்பினும், திமுகவும் உள்ளாட்சி தேர்தலை மிக மிக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. அதைச் சந்திப்பதற்கு எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அதுகுறித்தும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நாங்கள் மிக விரிவாக விவாதித்து இருக்கிறோம். அதனடிப்படையில், திமுகவின் சார்பில், எந்தப் பொறுப்புக்கு யார் யார் போட்டியிட விரும்புகிறார்கள்  என்பதை  அறிந்து கொள்வதற்கு வருகிற 14ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரையில் அந்தந்த மாவட்ட கழகத்தில் விருப்ப மனுக்களைக் கொடுக்கலாம் என முடிவு செய்து அந்தப் பணியும் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு: உட்கட்சித் தேர்தல் குறித்த முடிவு, அறிவிப்பு எதுவும் இருக்கிறதா? அது பற்றி நேற்று முன்தினம் தீர்மானத்திலேயே முடிவு செய்து அறிவித்திருக்கிறோம். பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் உட்கட்சித் தேர்தல் முறையாக நடைபெறும். கூட்டணிக் கட்சிகளுடன் எப்போது பேசத் திட்டமிட்டுள்ளீர்கள்? தேதி அறிவிக்கட்டும். தேதி அறிவித்தவுடன் முறையாக பேசப்படும். ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊராட்சி திமுக செயலாளர்கள் பதவி இடங்கள் புதிதாக உருவாக்கப்போவதாக வந்த தகவல் பற்றி? ஊராட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஏற்கனவே 30, 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அடிப்படையில் கிளைகள் வார்டு வாரியாக அமைக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலை கூட்டணியுடன் தான் சந்திக்கிறீர்களா? அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

Related Stories:

>