மகாராஷ்டிரா அரசியலில் மேலும் குழப்பம்: ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். 24 மணி நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு வைத்துள்ளார். சிவசேனா கட்சி ஆட்சியமைப்பதற்கான ஆதரவை சமர்ப்பிக்க தவறியதால் தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை சமர்ப்பிக்க சிவசேனாவுக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு இரவு 7.30 மணியுடன் முடிவுக்கு வந்தது.

நடைபெற்று முடிந்த மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தங்களிடம் போதிய பலமில்லை என்று கூறி ஆட்சி அமைக்க பாஜக மறுத்துவிட்டது. இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்த சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து திங்கள்கிழமை இரவு 7.30 மணிவரை கெடு விதித்தார். பெரும்பான்மை எம்எல்ஏக்கள் பலம் இருப்பதை கடிதம் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால் சிவசேனாவால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் ஆதரவையும் பெற முடியவில்லை. இன்று இரவு சிவசேனா தலைவர்கள், குழு, ஆளுநரை சந்தித்து மேலும் மூன்று நாட்கள் தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை சில நிமிடங்களிலேயே ஆளுநர் நிராகரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதை அடுத்து மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். 24 மணி நேரத்தில், பெரும்பான்மை பலத்தை காண்பிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார்.

Related Stories: