×

இந்தியாவில் நிலவும் காற்று மாசு காரணமாக இதய பாதிப்பு மற்றும் ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் நிலவும் காற்று மாசு காரணமாக இதய பாதிப்பு மற்றும் ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாட்டால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஸ்பெயின் நாட்டில் உள்ள உலக சுகாதார பார்சிலோனா அமைப்பின் குழுவினர் தலைமையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஐதராபாத் மற்றும் தெலுங்கானாவின் புறநகர் பகுதிகளை ஒட்டிய இடங்களில் 3,372 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், ஸ்டிரோக் அல்லது இதய பாதிப்பு போன்ற கார்டியோவாஸ்குலார் வியாதிகள் ஏற்படும் ஆபத்து மக்களிடம் அதிகளவில் உள்ளது தெரியவந்துள்ளது. ஏனெனில், காற்று மாசுபாட்டால் இதயத்தின் தமனிகள் தடிமன் அடைந்துவிடும். இது சி.ஐ.எம்.டி. குறியீடு என அளவிடப்படுகிறது. இந்த காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சி.ஐ.எம்.டி. குறியீடு அதிகளவில் இருந்துள்ளது.

காற்றில் மாசுபாடு ஏற்படுத்தும் நுண்துகள்களின் அளவு பற்றிய உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள அதிகபட்ச அளவானது ஒரு கன சதுர மீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் ஆகும். ஆனால் இந்தியாவில் ஆண்டு சராசரி அளவானது ஒரு கன சதுர மீட்டருக்கு 32.7 மைக்ரோ கிராம் என்ற அளவில் உள்ளது. இந்த ஆய்வு முடிவில் சி.ஐ.எம்.டி. குறியீடானது, கார்டியோமெட்டாபாலிக் ஆபத்து காரணிகளை கொண்ட அல்லது 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் அதிகம் உள்ளதும், மர கட்டைகள் போன்றவற்றை சமையல் எரிபொருளாக பயன்படுத்தும் பெண்களிடம் அதிகம் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தம், டையாபடீஸ் மற்றும் உடல்பருமன் போன்ற நோய் தாக்கங்கள் ஏற்படும் ஆபத்தும் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், இந்த ஆய்வின் முடிவுகள் மக்களை பீதியடைய செய்துள்ளன.


Tags : India, Air Pollution, Heart diseases , Stroke, Study
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...