திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் 14ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் 14ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களை மக்கள் மத்தியில் விளக்கிடும் வகையில் வரும் 16ம் தேதி பொதுக்கூட்டங்களை நடத்த மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் தீரமானிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே விருப்பமனு பெறுவதாக அதிமுக அறிவித்துள்ளதாக கூறிய அவர், உள்ளாட்சி தேர்தலை திமுக ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளதாகவும் தேர்தலை எதிர்கொள்ள எந்நேரமும் திமுக தயாராக உள்ளதாக கூறினார். திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை விருப்பமனு விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றும், தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்நிலையில், விருப்ப மனுவை ரூ.10 கட்டி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பெறலாம் எனவும், அப்படி பெற முடியாதவர்கள் முரசொலி பத்திரிகையில் வந்துள்ள மாதிரிப் படிவத்தை வைத்து அதேபோன்று விண்ணப்பத்தை அளிக்கும்படி கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

விருப்ப மனு கட்டண விவரம்

மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோர் ரூ.50,000, மாமன்ற உறுப்பினர் ரூ.10,000, நகர்மன்றத் தலைவர் ரூ.25,000, நகர்மன்ற உறுப்பினர் ரூ.5000, பேரூராட்சித் தலைவர் ரூ.10,000, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரூ.2500, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரூ.10,000, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ரூ.5000. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட விரும்புவோர் கட்டணத் தொகையில் பாதி மட்டும் செலுத்த வேண்டும். விருப்ப மனு படிவத்தை ரூ.10 செலுத்தி மாவட்டத் தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>