சென்னையில் காற்று மாசு பிரச்சனையை தடுக்க நடவடிக்கை கோரி தலைமை நீதிபதியிடம் முறையீடு : உரிய ஆய்வுக்கு பின் மனுவாக தாக்கல் செய்ய அறிவுரை

சென்னை : சென்னையில் காற்று மாசு பிரச்சனையை தடுக்க நடவடிக்கை கோரி தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அடுத்த வாரம் மனுவாக தாக்கல் செய்ய மனுதார‌ருக்கு தலைமை நீதிபதி அறிவுரை வழங்கினார்.

சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசு

நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு காற்று மாசு அதிகரித்துள்ளது.தற்போது, தமிழகத்தில் வடக்கில் இருந்து காற்று வீசுவதால் அங்குள்ள மாசுக்கள் அனைத்தும் வட தமிழகத்தை நோக்கி வந்துள்ளன. இதன்  காரணமாக சென்னை மாநகர் முழுவதும் கடந்த 3ம் தேதி முதல் பனியும், புகையும் சேர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறலால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 7ம் தேதி சென்னையில் காற்று மாசு டெல்லியை காட்டிலும் மிஞ்சியது. காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் டெல்லியை போன்ற நடவடிக்கை சென்னையில் எடுக்கப்படவில்லை. தமிழக அரசு சென்னையில் அதிகரித்து  வரும் காற்று மாசு குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறது. இங்குள்ள அமைச்சர்கள், செயலாளர்கள் சென்னையில் காற்று மாசு இல்லை என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.  ஆனால் காற்று மாசுவில் இருந்து மக்களை காக்க அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் 8வது நாளாக இன்றும் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் தனியார் காற்று மாசுபாடு நிகழ் நேர காண்காணிப்பு மையங்களின் ஆய்வில் சுவாசிக்க தகுந்த  அளவான தரக்குறியீடு 100 என்பதை விட அதிகமாக காற்று மாசுபாடு பதிவாகியுள்ளது. இன்று  காலை 8 மணி நிலவரப்படி காற்று தரக்குறியீடானது ஆலந்தூரில் 237, வேளச்சேரியில் 256, மணலி 128 ஆகவும் பதிவாகியுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் முறையீடு

இந்நிலையில் சென்னையில் காற்றுமாசு பிரச்சனையை தடுக்க நடவடிக்கை கோரியும் அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற புதிய நீதிபதி சாஹி முன் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் காற்று மாசு பிரச்சனை பற்றி நீதிபதி சாஹி முன் முறையீடு செய்தார். சென்னையில் காற்று மாசு அதிகரித்து வருவதாகவும் இதுவரை அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். இதை கேட்ட நீதிபதி சாஹி, பாட்னாவில் இருந்தபோது காற்று மாசினால் ஏற்படும் பாதிப்பு குறித்து உணர்ந்துள்ளதாக கருத்து தெரிவித்தார். இதையடுத்து  உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அடுத்த வாரம் மனுவாக தாக்கல் செய்தால் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மனுதார‌ருக்கு தலைமை நீதிபதி அறிவுரை வழங்கினார்.

Related Stories: