தமிழகமெங்கும் திமுக பொதுக்குழு தீர்மானங்களை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்துக, திண்ணை பிரச்சாரம் செய்க : மா.செ கூட்டத்தில் முடிவு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க அங்கீகாரம் அளித்தல், திருநங்கைகளை தி.மு.க.வில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்தல், தி.மு.க. அமைப்புத்தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடித்தல், இணைய தளம் மூலம் தி.மு.க. உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் கட்சி விதியில் திருத்தம் செய்தல், வெளிநாடுவாழ் இந்தியர்களை தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும், வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும். தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்தல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தல், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண வலியுறுத்தல் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்களை விளக்கிட பொதுக்கூட்டங்கள்

இந்நிலையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட  21 தீர்மானங்களை மக்களுக்கு விளக்கும் வகையில், தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும், நவம்பர் 16ம் தேதி (சனிக்கிழமை) “தி.மு.கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்களை” நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஊழலின் ஊற்றுக்கண்ணாக அதிமுக ஆட்சி திகழ்வதாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊழலில் திளைக்கும் அதிமுக அமைச்சர்களை பாஜக அரசு காப்பாற்றி வருவதாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குற்றம் சாட்டியுள்ளது. மத்திய பாஜக அரசின் தமிழக விரோத திட்டங்களுக்கு அதிமுக அரசு துணை போவதாக திமுக கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, மக்கள் மனங்களில் பதியும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்து, தமிழகம் முழுவதும் தீர்மானங்களை விளக்கி திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளவும் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Related Stories: