திருமணம் நடந்த சில மணி நேரத்தில் அதிர்ச்சி: மணப்பெண்ணின் வீட்டில் மிளகாய் பொடி தூவி 48 சவரன், ரூ.1 லட்சம் திருட்டு

வாலாஜா: வேலூர் மாவட்டம், வாலாஜா கிராமணி தெருவை சேர்ந்தவர் சண்முகம்(48), பீடி மண்டி உரிமையாளர். இவரது மூத்த மகள் பவித்ரா. இவருக்கு நேற்று காலை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் திருமணம் நடந்தது. இதனால் மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் ஆரணிக்கு சென்றனர். உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களின் வாழ்த்துக்களுடன் நேற்று திருமணம் சிறப்பாக நடந்தது. இதையடுத்து, மணமக்களுடன் சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தினர் வாலாஜாவில் உள்ள மணமகள் வீட்டிற்கு மதியம் 12 மணியளவில் வந்தனர்.

வீட்டின் முன்பக்க கதவை திறந்து வீட்டிற்குள் சென்றனர். அப்போது அங்கு மிளகாய் பொடி தூவப்பட்டு கிடந்தது. இதையடுத்து வீட்டிற்குள் சென்றபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே படுக்கை அறைக்கு சென்றபோது அங்கு அறையில் இருந்த பீரோ உடைத்து திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தது. அதில் மணப்பெண் பவித்ராவுக்காக திருமணத்திற்கு அணிவிக்க வைத்திருந்த 48 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

சண்முகம் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வீட்டை பூட்டிக்கொண்டு திருமணத்திற்கு சென்றதை அறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு வீடு முழுவதும் மற்றும் வீட்டின் வெளியே மிளகாய் பொடியை தூவிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி கீதா, வாலாஜா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். திருட்டு நடந்த சம்பவம் வாலாஜாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>