×

திருக்கோவிலூர் அருகே பரபரப்பு: கோயிலுக்குள் புகுந்து அம்மன் தாலி, உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சு. கொல்லூர் கிராமத்தில் பெரிய ஏரி பகுதியில், பெரியாயி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கடந்த 20 வருடமாக அந்த பகுதியில் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த இரண்டு வருடத்திற்கு முன் கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலை சுற்றி பாறையால் சூழப்பட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. இந்த கோயிலை மூன்று வகையறாவை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் பராமரித்து வருகின்றனர். கோயில் பூசாரியாக அதே கிராமத்தை சேர்ந்த  சின்னமூஞ்சு மகன் ஆறுமுகம் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோயிலை பூட்டிவிட்டு  வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை வழக்கம் போல் கோயிலுக்கு வந்தார். அப்போது, கோயிலின் வெளிப்புற கேட்டில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டும், கோயிலின் கருவறை கதவு உடைக்கப்பட்டும், அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு 10 ரூபாய், சில்லரை காசு மட்டும் சிதறி கிடந்துள்ளது.

மேலும் அம்மன் கழுத்தில் வெறும் மஞ்சள் கயிறு மட்டுமே இருந்தது. அதில் இருந்த தங்க காசு, தங்க தாலி மாயமாகி இருந்ததை கண்டு, அதிர்ச்சியடைந்த பூசாரி ஊர்பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கோயிலில் பொதுமக்கள் திரண்டனர். பின்னர் இதுகுறித்து, அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதேபோல் டி.தேவனூர் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெருமாள் கோயில் உண்டியலை உடைத்தும், பெருமாள் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. காணாமல் போன பொருட்களில் 4 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, உண்டியிலில் சுமார் ஒரு லட்சம் இருந்திருக்கலாம் என ஊர் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். கோயிலை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் மர்மநபர்கள் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Amman Dali , Robbery
× RELATED கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் கோயிலில்...