மனைவியை தொந்தரவு செய்து சொத்து பறிக்க முயன்ற அண்ணனை கழுத்து அறுத்து கொலை செய்த தம்பிகள்: திருவல்லிக்கேணியில் பரபரப்பு

சென்னை: மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சொத்து அபகரிக்க முயன்ற அண்ணனை கழுத்து அறுத்து அவரது தம்பிகளே கொலை செய்தனர். இந்த சம்பவம் திருவல்லிக்கேணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்தவர் எழுமலை. இவருக்கு சக்திவேல் (48), ஞானவேல்(45), கந்தவேல்(37) ஆகிய மூன்று மகன்கள். சக்திவேல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். குடிபோதைக்கு  அடிமையானவர் என்பதால் தனது சகோதரன் ஞானவேல் மனைவியிடம் அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார்.மேலும், பூர்விகமாக உள்ள வீட்டை சக்திவேல் தனது இரண்டு சகோதரர்களிடம் இருந்து அபகரிக்க முயற்சி செய்து வந்துள்ளார். இதனால் சக்திவேலுவுக்கும் அவரது தம்பிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு பல முறை ஒருவரை  ஒருவர் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். அதேநேரம் ஞானவேல் தனது மனைவிக்கு அடிக்கடி தொந்தரவு செய்து வரும் சக்திவேலை ஒழித்து கட்ட முடிவு செய்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சக்திவேல் குடிபோதையில் வீட்டிற்கு  வந்துள்ளார். அப்போது ஞானவேல் மனைவியிடம் தன்னுடன் நெருங்கி இருக்கும் படி தொந்தரவு செய்துள்ளார். இதை பார்த்த சகோதரர்கள் இருவரும் தனது அண்ணன் சக்திவேலை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை  செய்துள்ளனர்.

பிறகு உடலை வீட்டிலேயே விட்டுவிட்டு ஞானவேல் மற்றும் கந்தவேல் தங்களது குடும்பத்துடன் வி.ஆர்.பிள்ளை தெரு வழியாக சென்று கொண்டிருந்தனர். கொலை குறித்து அருகில் வசிப்போர் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்  முத்துபாண்டிக்கு தகவல் கொடுத்தனர். அவர் அந்த தகவலை ஐஸ்அவுஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் இருவரையும் வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு மற்றும் லாயிட்ஸ்  சாலை சந்திப்பில் சுற்றி வளைத்து பிடித்து மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.அதைதொடர்ந்து மெரினா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருவல்லிக்கேணியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>