இந்தியாவை கேலி செய்யும் வகையில் அபிநந்தன் உருவ பொம்மை: விமானப்படை அருங்காட்சியகத்தில் பாக். விஷமம்

இஸ்லாமாபாத்: தனது நாட்டு விமானப்படை அருங்காட்சியகத்தில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தனின் உருவ பொம்மையை வைத்து பாகிஸ்தான் கேலி செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில்,  40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய வான் எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன.

இந்திய விமான படை விமானியான தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன், பாகிஸ்தானின் அதிநவீன எப்-16 போர் விமானத்தை துரத்தி சென்று தாக்கி அழித்தார். அப்போது அவருடைய மிக் விமானத்தை பாகிஸ்தான் ஏவுகணை தாக்கியது. இதனால், அந்நாட்டு எல்லைக்குள் பாராசூட் மூலமாக அபிநந்தன் இறங்கினார். அவரை அந்நாட்டு வீரர்கள் சிறைப்பிடித்தனர். தனது நாட்டு வீரர்கள் பிடியில் ரத்த காயங்களுடன் அபிநந்தன் இருக்கும் வீடியோவை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது. இந்தியாவின் தூதரக முயற்சிகளால், கடந்த மார்ச் 1ம் தேதி அட்டாரி-வாகா எல்லையில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

முன்னதாக, பாகிஸ்தான் வெளியிட்ட மற்றொரு வீடியோவில் கையில் டீ கோப்பையுடன் பாகிஸ்தான் வீரர்களிடம், ‘டீ நன்றாக உள்ளது. நன்றி,’ என அபிநந்தன் கூறுவது போன்ற காட்சிகள் இருந்தன. இந்த சம்பவத்தை கேலி செய்யும் வகையில் கராச்சியில் உளள் பாகிஸ்தான் விமான படை அருங்காட்சியகத்தில் அபிநந்தன் உருவபொம்மை வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர் ஒருவர் அபிநந்தனை சிறைப்பிடித்து அழைத்து செல்வது போன்றும் அதில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்வர் லோதி என்பவர் தனது டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

மேலும், ‘அபிநந்தனின் கையில் ஒரு அருமையான டீயை கொடுத்து இருந்தால் நான்றாக இருந்திருக்கும்,’ என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. மேலும், கர்தார்பூர் குருத்வாராவிற்கு அருகே, போரின்போது   பாகிஸ்தான் மீது இந்தியா வீசிய வெடிகுண்டு ஒன்றை வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அந்நாடு காட்சிக்கு வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>