வருகிறது புதிய டொயோட்டா ரெய்ஸ்

கடந்த வாரம் டொயோட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் டைகட்சூ நிறுவனம் ராக்கி என்ற பெயரில் காம்பேக்ட் ரக எஸ்யூவி ரக காரை ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்து வரும் மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தியது. அதே எஸ்யூவி ரக கார், டொயோட்டா பிராண்டில் ‘’ரெய்ஸ்’’ என்ற பெயரில் வர இருக்கிறது. இம்மாதம் துவக்கத்தில் இப்புதிய டொயோட்டா ரெய்ஸ் கார் உலகளாவிய சந்தையில் அறிமுகமாக உள்ளது.

இப்புதிய கார், குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் டொயோட்டா பிராண்டில் வெளிவர இருக்கிறது. இதன் டாப் வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்கு, பிரம்மாண்ட கிரில் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கிறது. இந்த காரில் 17 அங்குல அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இப்புதிய காருக்கு, டொயோட்டா நிறுவனம் டிஆர்டி பேக்கேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்துவமான ‘’டி’’ பில்லர் அமைப்பு, எல்இடி பட்டைகளுடன்கூடிய டெயில் லைட் கிளஸ்ட்டர் ஆகியவை இக்காரில் இடம்பெற்றுள்ளன. வலிமையான பாடி கிளாடிங் சட்டங்கள், புதிய முன்புற பம்பர் அமைப்பு ஆகியவையும் வசீகரிக்கின்றன.

இதன், டேஷ்போர்டு அமைப்பானது டைகட்சூ ராக்கி காரில் இருந்து பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது. இந்த காரில், 8.0 அங்குல தொடுதிரை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. 3,995 மி.மீ நீளம், 1,695 மி.மீ உயரம், 1,620 மிமீ அகலம் கொண்டதாக உள்ளது. மேலும், 2,525 மி.மீ வீல் பேஸ் நீளத்தை பெற்றுள்ளது. இப்புதிய கார், டொயோட்டா நிறுவனத்தின் உலகளாவிய டிஎன்ஜிஏ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில், 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் 98 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இப்புதிய டொயோட்டா ரெய்ஸ் கார், இந்தியாவில் சிறந்த வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நிச்சயம் இந்திய வாடிக்கையாளர்களை இந்த கார் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறது டொயோட்டா. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

Related Stories: