×

ஆட்டோமொபைல்: விற்பனையில் தொடர்ந்து அசத்தும் கேடிஎம் 125

கேடிஎம் டியூக் பைக்கின் பிரபலமான மாடல் பைக்குகளின் விற்பனை கடந்த செப்டம்பர் மாதத்தில் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம் 790 டியூக் மாடல் வெளியான பத்து நாட்களில் மட்டும் 41 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இதில் அதிகப்பட்சமாக கேடிஎம் 125 (டியூக்+ஆர்சி) மாடல் கடந்த மாதத்தில் 2,648 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இந்த லிஸ்ட்டில் கேடிம் 200, 250, 390 (டியூக்+ஆர்சி) மற்றும் சமீபத்திய அறிமுகம் டியூக் 790 பைக்கும் உள்ளன.

மொத்தமாக இந்நிறுவனம் 5,805 யூனிட் பைக்குகளை 39.28 சதவீத வளர்ச்சியுடன் விற்பனை செய்துள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் இந்த முன்னேற்றத்திற்கு 125சிசி எண்ட்ரி லெவலில் அறிமுகப்படுத்தப்பட்ட கேடிஎம் பைக்குகள்தான் மிக முக்கிய காரணம் ஆகும். 2018 நவம்பரில் கேடிஎம் டியூக் 125 வெளியானது. அதனைத்தொடர்ந்து, இந்த வருடத்தின் துவக்கத்தில் இப்பைக்கின் ஆர்சி மாடல் அறிமுகமானது. இவை இரண்டும்தான் தற்சமயம் இந்திய மார்கெட்டில் மிகச்சிறப்பான முறையில் விற்பனையாகி வருகிறது.

ஆனால், இந்த 125 டியூக் பைக்கின் அபரிமிதமான வளர்ச்சியால் கேடிஎம்மின் மற்ற மாடல்களான 200, 250, 390 போன்ற பைக்குகள் கடந்த ஆண்டை காட்டிலும் சிறிது விற்பனை சரிவை சந்தித்துள்ளன. கேடிஎம் 790 பைக், கடந்த மாதம் 23-ம் தேதியில்தான் ₹8.64 லட்சம் விலையுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான 10 நாட்களிலேயே 41 யூனிட்கள் விற்பனையானது. 799சிசி லிக்யூடு கூல்டு ட்வின் இன்ஜினுடன் வெளியாகி வரும் 790 பைக் 104 பிஎச்பி பவரையும் 87 என்எம் டார்க் திறனை ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய டிரான்ஸ்மிஷன் அமைப்புடன் வெளிப்படுத்துகிறது.

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் அமைப்பாக முன் சக்கரத்தில் 43 மி.மீ தலைகீழான போர்க் மற்றும் டியூல் 300 மி.மீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் முழுவதும் சரி செய்யும் வகையிலான மோனோ-ஷாக் மற்றும் சிங்கிள் 240 மிமீ டிஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளன. கேடிஎம் தனது அடுத்த தயாரிப்பு வாகனமான 390 அட்வென்ஜர் பைக்கை வருகிற டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. இதனைத்தொடர்ந்து கேடிஎம் அட்வென்ஜர் 250 வெளியாக உள்ளது. இந்த இரு அட்வென்ஜர் பைக்குகளும் கேடிஎம் நிறுவனத்தின் விற்பனை சதவீதத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Automobile, Sales, Continuous, KTM 125
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...