மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை தவிர்க்க முடிவு?: பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் பகத்சிங் அழைப்பு விடுக்க இருப்பதாக தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுக்க இருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில்  வெற்றி பெற்றன. தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜனதா-சிவசேனாவுக்கு ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலம்  உள்ளது. ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி பிரதிநிதித்துவம் ஆகிய கோரிக்கைகளை சிவசேனா  பிடிவாதமாக வலியுறுத்தி வருவதை பா.ஜனதா ஏற்க மறுத்து வருவதால்,

தேர்தல் முடிவு வெளியாகி 2 வாரங்களுக்கு மேலாகியும் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடித்தது. தனிப்பெரும் கட்சியாக இருந்த போதிலும்  ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோராமல் பா.ஜனதா மவுனம் சாதிக்கிறது. 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்து விட்டதால் நேற்று ஆளுநரை  சந்தித்து பட்நவிஸ் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆளுநர், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை காபந்து முதல்வராக பதவியில்  நீடிக்கும்படி பட்நவிசிடம் கேட்டுக் கொண்டார். பின்னர், பட்நவிஸ் அளித்த பேட்டியில், ‘‘இரு கட்சிகளுக்கும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு  முதல்வர் பதவி என உடன்பாடு செய்து கொள்ளப்பட்டதாக சிவசேனா கூறுகிறது.

ஆனால், முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக எனது முன்னிலையில் எந்தவிதமான உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை. இதனை  பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டனர். மாற்று ஏற்பாடுகள்  செய்யப்படும் வரை காபந்து முதல்வராக நீடிக்குமாறு ஆளுநர் என்னிடம் கேட்டுக் கொண்டார். விரைவில் பாஜ - சிவசேனா கூட்டணி உறுதியானால்,  புதிய அரசு பதவியேற்கலாம்; இல்லையேல், ஜனாதிபதி ஆட்சி அமலாகலாம் என்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி  பெற்ற பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பெரும்பான்மையை நிரூபிக்க 145 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், பாஜகவிடம் 105 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் தேவேந்திர  பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பொறுப்பெற்றுக்கொண்டாள். மகாராஷ்டிராவில் எம்எல்ஏ-க்கள் பேரம் சுடுபிடிக்கும் என்று கூறப்படுகிறது. 

Related Stories: