கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு: 17 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நவம்பர் 13-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

டெல்லி: கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடந்தபோது, இக்கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏ.க்கள் பாஜ.வுக்கு ஆதரவாக பதவியை  ராஜினாமா செய்தனர். மேலும், கொறடா உத்தரவை மீறினர். இதனால், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இவர்களின் பதவியை அப்போதைய  சபாநாயகர் ரமேஷ் குமார் பறித்தார். மேலும், இவர்கள் அனைவரும் 2023ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார். இந்த உத்தரவை  ரத்து செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதை விசாரித்த நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய்  ரஸ்தோகி மற்றும் கிருஷ்ணா முராரே அமர்வு, கடந்த மாதம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

காங்கிரஸ் புது மனு: இவ்வழக்கில் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்த்து வரும் நிலையில், கடந்த வாரம் ஹுப்பள்ளியில் நடந்த  பாஜ தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா பேசியதாக கூறப்படும் ஆடியோ சிடி ஒன்று வெளியானது. அதில், மஜத - கூட்டணி கட்சி  எம்எல்ஏ.க்கள் பதவி விலகல் விவகாரம், பாஜ தேசிய தலைவர் அமித் ஷா மேற்பார்வையில் நடந்ததாக எடியூரப்பா பேசி இருக்கிறார்.

இது, பரபரப்பை  ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, எடியூரப்பாவின் இந்த பேச்சு அடங்கிய ஆடியோவை  உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கடந்த 4-ம் தேதி  தாக்கல் செய்தது. அதை பெற்றுக் கொண்ட நீதிபதிகள், தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்று விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர். இந்த மனு,  கடந்த 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த ஆடியோ ஆதாரத்தை தீர்ப்பின் போது பரிசீலனைக்கு ஏற்பதாக கூறிய நீதிபதிகள், விசாரணை  ஒத்திவைத்தனர். இந்நிலையில், கர்நாடகா எம்எல்ஏ.க்கள் 17 பேர் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் வரும் 13-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கவுள்ளது.

பாஜ.வுக்கு மஜத ஆதரவு தேவகவுடா அறிவிப்பு:

‘கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடப்பதை விரும்பவில்லை,’என்று சில தினங்களுக்கு முன் கூறிய முன்னாள் முதல்வர் குமாரசாமி, பாஜ அரசுக்கு  ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். இதை ஏற்க மறுத்த மஜத மூத்த தலைவர்கள், ‘தேவகவுடா சொன்னால் மட்டுமே ஏற்போம்’ என அறிவித்தனர்.  இந்நிலையில், முதல்வர் எடியூப்பாவிடம் கடந்த 5-ம் தேதி போன் மூலம் பேசிய தேவகவுடா, அவருடைய ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும்  அவரிடம், ‘எங்கள் கூட்டணி ஆட்சி கவிழ சித்தராமையா சதி செய்தது பற்றி,  இப்போதுதான் எங்களுக்கு தெரிந்துள்ளது. மாநிலத்தில் இடைத்தேர்தல்  நடத்துவதற்காக அவர் அரசியல் நாடகம் ஆடியுள்ளார். நாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக இல்லை. 224 தொகுதியில் நிறுத்துவதற்கு மஜத.வில்  வேட்பாளர்கள் கிடையாது. எனவே, இடைத்தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், பாஜ அரசுக்கு ஆதரவு அளிப்போம்,’ என தேவகவுடா கூறியதாக மஜத  வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: