ராம பக்தியோ, ரஹீம் பக்தியோ பக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது : பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருத கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நீதிபரிபாலனத்தின் முக்கியத்துவத்தை இந்த தீர்ப்பு உணர்த்தியிருப்பதாகவும், நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பேண வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராம பக்தியோ, ரஹீம் பக்தியோ பக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் உருவாக்க மத்திய அரசுக்கு அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளை மேற்பார்வையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதின்கட்கரி

அனைவரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு - ராஜ்நாத் சிங்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்பது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories: