அயோத்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு; இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்... இந்து அமைப்புகளுக்கே நிலம் ... ராமர் கோயில் கட்ட அனுமதி

புதுடெல்லி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் உருவாக்க மத்திய அரசுக்கு அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளை மேற்பார்வையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

சம்பந்தப்பட்ட நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லாலா அமைப்பினர் சரிசமமாக பிரித்துக் கொள்ள தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இப்பிரச்னையை தீர்த்து வைக்க நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

4 மாதங்களாக இந்த குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் நாள் தோறும் விசாரிக்கத் தொடங்கியது.

தொடர்ந்து 40 நாட்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

அதன்படி ஷியா வக்ஃபு வாரியம் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யப்பட்ட 14 மனுக்களில் ஒரு சில மனுக்கள் அரசியல் சாசன அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்து அமைப்பான நிர்மோகி அகாரா தாக்கல் செய்த மனு மிகவும் தாமதமானது என்று கூறிய நீதிபதிகள், நிர்மோகி அகாரா ஒரு தனி அமைப்பு தான் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

* ஒருவரின் மத நம்பிக்கையில் மற்றொருவரின் மத நம்பிக்கை தலையிட முடியாது

* அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்று கொள்கிறது

* சர்ச்சைக்குரிய இடத்தில் 1949-ல் ராமர் சிலை வைக்கப்பட்டது.

* ராம்லல்லா அமைப்புக்கு மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர அதிகாரம் உள்ளது

* இந்து அமைப்பான நிர்மோகி அகாரா தாக்கல் செய்த மனு மிகவும் தாமதமானது

* அயோத்தியில் பாபர் மசூதி காலி மனையில் கட்டப்பட்டதாக கூறப்படுவது தவறு

* அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு இஸ்லாமிய கட்டடங்கள் எதுவும் இல்லை

* அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு கோயில்கள் இருந்தது உறுதி செய்யப்படவில்லை

* அயோத்தியில் தான் ராமர் பிறந்தார் என்ற நம்பிக்கையில் சர்ச்சைகளுக்கு இடமில்லை

* அயோத்தி நில உரிமையை சட்டவிதிகளின் படியே நீதிமன்றத்தால் முடிவு செய்யப்படும்

* மசூதி மட்டுமே தொழுகை செய்வதற்கான இடம் என்பதை உண்மையான முஸ்லீம்கள் ஏற்பதில்லை

* அயோத்தி வழக்கில் முஸ்லிம் அமைப்பான சன்னி வக்பு வாரியம் தான் வழக்காடும் உரிமை கொண்டது

* அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமையை இஸ்லாமிய அமைப்புகள் ஒரு போதும் இழந்து இல்லை

* சர்ச்சைக்குரிய இடத்தின் ஒரு பக்கம் தொழுகையும் நடந்து வந்துள்ளது

* அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடத்துக்கு வெளியே ராமர், சீதையை இந்துக்கள் வழிப்பட்டு வந்தனர்

Related Stories: