சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக காற்று மாசு அதிகரிப்பு; காற்றின் தரக்குறியீடு மணலியில் 357 ஆக பதிவு

சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக காற்று மாசு அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 50 வரை மட்டுமே இருக்க வேண்டிய காற்றின் தரக்குறியீடு மணலியில் 357 ஆக அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசால் சுவாசக்கோளாறு, காய்ச்சல், இருமல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு பிஎம் 10, பிஎம் 2.5 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், காற்றில் மிதக்கும் நுண்துகள் பிஎம் 2.5ன் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவான 60 மைக்ரோ கிராமை விட கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று முன்தினம் காற்றில் மிதக்கும் நுண்துகள் அளவு 254 மைக்ரோ கிராமமாக இருந்த நிலையில், சென்னையில் 264 மைக்ரோ கிராம் இருந்தது.

சென்னையில் வேளச்சேரி, ராமாபுரம், மணலி, கொடுங்கையூர், அண்ணா நகரில் சராசரி காற்றுமாசு 341 தரக்குறியீடாக இருந்தது. சென்னையில் வறண்ட வானிலை நிலவி வருவதால் நாளை வரை காற்றுமாசு அதிகரித்தே காணப்படும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி காற்று மாசு தரக்குறியீடு 330ஆக இருந்தது. அதே நேரம் சென்னையில் ஆலந்தூரில் தரக்குறியீடு 301 ஆகவும், மணலியில் 342 ஆகவும், மணலி கிராமத்தில் 221 ஆகவும், வேளச்சேரியில் 307 ஆகவும் காற்று தரக்குறியீடு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>