திருச்சி மத்திய சிறை வளாகத்தில் பரபரப்பு: உண்ணாவிரதத்தில் தூக்க மாத்திரை தின்ற 15 வெளிநாட்டு கைதிகள்

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் முகாம் சிறை உள்ளது. இந்த முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் 37 பேர், வங்கதேசத்தினர் 30 பேர், சீனா, பல்கேரியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மன் நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 72 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள். இந்நிலையில் வழக்கை விரைந்து முடித்து, தங்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 46 பேர் நேற்றுமுன்தினம் முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இலங்கை, வங்காளதேசம் நாடுகளை சேர்ந்த தலா 22 பேர், சீனா, பல்கேரியா நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் ஈடுபட்டனர். 2வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் போராட்டத்தை தொடர்ந்தனர். இவர்களில் 20 பேர் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தனர்.

Advertising
Advertising

தகவலறிந்ததும் சிறையில் உள்ள மருத்துவர்கள் வந்து 20 பேருக்கும் சிகிச்சை அளித்தனர்.  மேலும் இலங்கை தமிழர்கள் கவிஞன், செல்வம், ஹரிஸ்ராம் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த மோனிங், விஜ்சுவால் உள்ளிட்ட 15 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் முகாம் சிறைக்கு சென்ற  ஆர்டிஓ அன்பழகன், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் தங்களை விடுவிக்க  வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக முடியாது சட்டவிதிகளின் படிதான்  செயல்பட முடியும் என கூறியதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  

உண்ணாவிரதத்தில் மாத்திரை  தின்ற 7 பேரையும் ஒரே ஆம்புலன்ஸ்சில் மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர். மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் கதவை திறந்த போது,  ஒருவர் வேனில் இருந்து கீழே விழுந்தார். இதனால் அங்கு திரண்டிருந்த உறவினர்கள் இப்படியா அடைத்து கொண்டு வருவது என கேட்டு போலீசாரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: