×

சேலத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்வு: தலையில் சுவிங்கம் ஒட்டிவந்த இளைஞர் சிக்கினார்: உயரத்தை அதிகரித்து காட்ட நூதன முறைகேடு

சேலம்: சேலத்தில் நடந்த இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வில், உயரத்தை அதிகரித்து காட்ட தலையில் சுவிங்கத்தை ஒட்டி மறைத்து வந்த இளைஞர் சிக்கினார். தமிழகம் முழுவதும் 8,888 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப, சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு, கடந்த 6ம் தேதியில் இருந்து உடல் தகுதி, உடல் திறன் தேர்வு நடந்து வருகிறது. சேலம் மாநகர் மற்றும் மாவட்டம், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,767 பேருக்கு சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு நடக்கிறது. இவர்களில், உடல் திறன் தேர்வுக்கு 1,036 பேர் தேர்ச்சி பெற்றனர். நேற்று, 3-வது நாளில் 555 பேர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 455 பேர் மட்டும் பங்கேற்றனர். பங்கேற்ற  இளைஞர்களுக்கு உயரம் மற்றும் மார்பளவு அளவீடு நடத்தப்பட்டது. தொடர்ந்து 1,500 மீட்டர் தகுதி ஓட்டம் நடந்தது.

உயரம் அளவீடு செய்த இடத்தில், ஒரு இளைஞரின் தலையை தடவி பார்த்தபோது, முடிக்குள் ‘சுவிங்கம்’ உருண்டையாக உருட்டி ஒட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. உடனே அதிகாரிகளிடம், அந்த இளைஞரை போலீசார் அழைத்துச் சென்றனர். அவர்கள், விசாரணை நடத்தி, முடிக்குள் இருந்த சுவிங்கத்தை அகற்றச் செய்தனர். விசாரணையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தயாநிதி என்பதும், 170 சென்டி மீட்டர் உயரத்துக்காக தலையில் சுவிங்கம் வைத்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து தயாநிதியை தகுதி நீக்கம் செய்து வெளியேற்றினர்.  விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நடந்த தேர்வில் ஒரு இளைஞர், உயரத்தை அதிகரித்து காட்ட காலில் அட்டையை ஒட்டிக் கொண்டு வந்தார். அவரை தகுதி நீக்கம் செய்தநிலையில், சேலத்தில் தலைமுடிக்குள் சுவிங்கம் வைத்து வந்த இளைஞர் பிடிபட்ட சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : guard ,Salem , Salem, Guard selection, swing, youth, abuse
× RELATED தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச்...