வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின

ஆரல்வாய்மொழி: நாகர்கோவிலில் இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல மணி நேரம் சோதனை நடத்தினர். நாகர்கோவில் கோட்டார் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அன்புபிரகாஷ். இவர் குமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலம், களியக்காவிளை உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார். இவர் 1999ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். பின்னர் 2012 ல் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். நெல்லை மாவட்ட காவல் நிலையங்களிலும் பணியாற்றி உள்ளார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த வருடம்  குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலக உத்தரவின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த வகையில் 1.1.2014 முதல் 30.11.2017 வரையிலான கால கட்டங்களில் அதிகளவில் சொத்துக்கள் சேர்த்ததாக போலீசார் தெரிவித்தனர். மொத்தம் 83 லட்சத்து 95 ஆயிரத்து 738 மதிப்பிலான நகைகள், சொத்துக்கள் இருந்துள்ளன. இதில் 53 லட்சத்து 50 ஆயிரத்து 608-க்கு மட்டும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மீதி 30 லட்சத்து 45 ஆயிரத்து 130 வருமானத்துக்கு அதிகமாக சேர்த்ததாக வழக்கில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை நாகர்கோவில் அருகே தேரேகால்புதூரில் உள்ள அன்புபிரகாஷ் வீட்டுக்கு, குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மதியழகன் தலைமையில் போலீசார் சென்றனர். அப்போது அன்புபிரகாஷ் இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தி வீட்டில் சோதனையிட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை பல மணி நேரம் நீடித்தது. வீட்டின் ஒவ்வொரு அறையிலும் சோதனை நடைபெற்றது.

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரிலும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் சில முக்கிய தஸ்தாவேஜூகள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய முழு விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதால் வழக்கமாக நடைபெறும் சோதனைதான் என்று தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஒருவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: