காணொளி காட்சியில் முதல்வர் துவக்கினார் மீனாட்சியம்மன் கோயிலில் இலவச லட்டு விநியோகம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாத விநியோக திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் நேற்று ெதாடங்கி வைத்தார். பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த அக். 27ம் தேதி தீபாவளி முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் நேற்று முதல், மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு விநியோகிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, காலை 10.25 மணிக்கு இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் பக்தர்களுக்கு லட்டு வழங்கி தொடங்கி வைத்தார். இதற்கென மதுரை கோயிலில்  தயாரான லட்டு ஏற்கனவே சென்னை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வருடன், அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், செல்லூர் ராஜூ, உதயகுமார் கலந்து கொண்டனர்.

மதுரை மீனாட்சி கோயிலில் நேற்று இதற்கென பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கலெக்டர் வினய் பங்கேற்று, பக்தர்களுக்கு லட்டுகளை வழங்கினார்.  அவர் கூறும்போது, ‘‘மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் சராசரியாக 22 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். பிரசாதமாக இவர்களுக்கு லட்டு வழங்குவது நிறைவளிக்கும்’’ என்றார்.  கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோயில் பிரசாதமாக 30 கிராம் எடையுள்ள தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டது. இதுதவிர, அம்மனை தரிசித்து, வெளியில் வரும் பக்தர்களுக்கு கூடல்குமாரர் சன்னதி பகுதியில் வைத்தும் லட்டு வழங்கப்பட்டது.

Related Stories: