குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு குழந்தைகளை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும்: முதல்வரை நேரில் சந்தித்து லதா ரஜினிகாந்த் வலியுறுத்தல்

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். பின்னர் அவர்  நிருபர்களுக்கு அளித்த பேட்டி: குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் அரசு சிறப்பாக செயல்படுகிறது. ஆழ்துளை குழாய் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை காப்பாற்றும் முயற்சியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. ஆனாலும், குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை. ஆழ்துளை கிணறு மட்டுமல்ல, இன்னும் பல ஆபத்துகள் குழந்தைகளுக்கு உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் நம்மை நம்பிதான் உள்ளனர். காலை முதல் மாலை வரை அவர்களை கண்காணிக்க வேண்டியது நமது கடமை. பெரியவர்களுக்கு என அரசில் பல்வேறு துறைகள் உள்ளது.

ஆனால் குழந்தைகளுக்கென ஒரு துறை மட்டும் இருந்தால் போதாது. மருத்துவம், கல்வி, சமூக பாதுகாப்பு உள்ளிட்டவை அடங்கிய குழு தேவைப்படுகிறது. ஆகவே அவர்களை பாதுகாக்க மாநில அளவில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் என பல்துறை நிபுணர்கள், வல்லுநர்கள் அடங்கிய குழுவை உருவாக்குவது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை நடத்தினோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: