×

ஏல சீட்டு நடத்தி 26 லட்சம் மோசடி : ஆசாமிக்கு வலை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் குமரன் நகரை சேர்ந்தவர் முனுசாமி (54). இவர் மேட்டுத் தெருவில் வசிக்கும் மாரிசாமி (34) என்பவரிடம் சுமார் 8 லட்சம் மதிப்பில் மூன்று பிரிவுகளில் ஏலச்சீட்டு போட்டுள்ளார். இந்த சீட்டுகள் சில மாதங்களுக்கு முன்பு முதிர்வடைந்து விட்டது. ஆனால் அதற்கான பணத்தை மாரிசாமி தராமல் ஏமாற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த 30ம் தேதி மாரிசாமி திடீரென வீட்டை காலி செய்து கொண்டு குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த முனுசாமி இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்தனர். அதில், மாரிச்சாமி, முனுசாமி மட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த பலரிடம் தீபாவளி பண்டு, நகை பண்டு மற்றும் ஏலச்சீட்டு போன்றவைகளில் சுமார் 26 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

* ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருவில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சட்ட விரோதமாக மது விற்ற எலின் சிந்தா (22) என்பவரை கைது செய்தனர். அவரிடம், இருந்து 400 மது பாட்டில்கள், 7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
* பர்மா பஜாரில் அப்துல் ரகுமான்கான் (40) என்பவரின் செல்போன் விற்பனை கடை பூட்டை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே இருந்த 1.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.
* வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (27) என்பவரின் வீட்டு பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
* வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியை சேர்ந்த சூர்யா (24) என்பவரை தாக்கிய வழக்கில், கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (24) மற்றும் ஓட்டேரி பகுதியை சேர்ந்த கோபி (19) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Auction , 26 lakhs for fraud
× RELATED ஏலக்காய் ஏலத்தை போடியில் நடத்த அனுமதி...