அடிப்படை வசதி செய்து தராததை கண்டித்து குடும்ப அட்டையை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம்

துரைப்பாக்கம்: திருவான்மியூர் மீனவ கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டு 35 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. இதனால் வீடு இழந்தவர்கள், வசிக்க இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் தான் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் தீயணைப்பு வாகனம் வர முடியாமல் வீடுகள் எரிந்து சாம்பலாகின. எனவே இப்பகுதியில் சாலைகள், தெருவிளக்கு அமைத்து தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள 2 பொது கழிப்பறை மற்றும் சுடுகாடு ஆகியவை பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனை சீரமைக்க கோரி, அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், திருவான்மியூர் குப்பம் வேம்படி அம்மன் மீனவர் பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கான வருவாய் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் திருவான்மியூர் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.அப்போது பொதுமக்கள் அவர்களிடம் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மனு அளித்தனர். அதற்கு மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுபற்றி பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இப்பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எங்களது குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்,’’ என்றனர்.

Related Stories:

>