நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு

சென்னை:  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை  நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கம், சங்கத்தின் பொருளாளர் கார்த்தி ஆகியோர்  சார்பில் நேற்று காலை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் முறையிடப்பட்டது. நடிகர் சங்கம் தொடர்பான வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் நிலுவையில் இருப்பதால் அந்த நீதிபதியே இந்த வழக்கையும் விசாரிப்பார் என்று நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்தார்.இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் மாலை விசாரணைக்கு வந்தது.  அப்போது, நடிகர் சங்கம் சார்பில் மூத்த வக்கீல் ஓம்.பிரகாஷ், வக்கீல் கிருஷ்ணா ரவீந்திரன், நடிகர் கார்த்தி சார்பில் வக்கீல் செங்கோட்டுவேல் ஆகியோர் ஆஜராகி,  தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தனி அதிகாரியை தமிழக அரசு நியமித்தது சட்ட விரோதம். தனி அதிகாரி நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும்  என்று வாதிட்டனர்.

அப்போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் ஆஜராகி, அரசு தனி அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.  சங்கத்தின் நிர்வாக பணிகளை கவனிக்க எந்த குழுவும் இல்லாததால், நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை அல்லது ஓராண்டு வரை தனி அதிகாரியை நியமித்திருக்கிறோமே தவிர நேரடியாக ஓராண்டுக்கு நியமிக்கவில்லை. நடிகர் சங்கத்தில் தற்போது வெற்றிடம் இருப்பதால், சங்க நடவடிக்கைகளை கவனிக்கவே தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சங்க பொருளாளர் கார்த்தி தாக்கல் செய்த மனுவுக்கு நவம்பர் 14க்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: