திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி: அரசு பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வினியோகம் செய்தது தொடர்பாக பிடிஓ விசாரணை நடத்தினார். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்தில் 119 சத்துணவு மையங்கள், 136 அங்கன்வாடி மையங்கள், 11 நகராட்சி பள்ளிகள், 24 நகராட்சி அங்கன்வாடி மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு இலவச முட்டை வழங்கப்பட்டு வருகிறது.  நேற்று தாதவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுடன் இலவச முட்டை வழங்கப்பட்டது. இவை அழுகிய நிலையில் இருப்பதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளிக்கு சென்ற பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்களிடம் கேட்டனர். அதற்கு சத்துணவு அமைப்பாளர், எங்களுக்கு வந்த முட்டையை சமைத்து கொடுத்தோம். எங்களுக்கு வேறு ஏதும் தெரியாது என்றாராம். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நலங்கிள்ளி உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அழுகிய முட்டைகளை பறிமுதல் செய்து, வேறு முட்டையை சமைத்து மாணவர்களுக்கு விநியோகிக்க உத்தரவிட்டார். மேலும் மீதமுள்ள முட்டைகளை பரிசோதனை செய்து பார்த்தபோது அவை அனைத்தும் அழுகிய நிலையில் இருந்தது. அவற்றையும் பறிமுதல் செய்த பிடிஓ,  இதுபோன்ற தவறு இனி நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாகவும், முட்டைகளை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார். இதையேற்ற பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: