உயர்நீதிமன்றம் செல்ல வசதியாக நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு அதிகாலை ரயில்: பயணிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: உயர்நீதிமன்றத்துக்கு செல்ல வசதியாக நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு அதிகாலை ரயில் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென் மாவட்ட மக்கள் வழக்குகள் நிமித்தமாக சென்னையில் உள்ள உயர்நீதி மன்றத்துக்கு சென்று வர வேண்டி இருந்தது. இதன் காரணமாக மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளை 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  மதுரையில் உள்ள உயர்நீதிமன்றத்தில் குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, தேனி, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வழக்குகள் கையாளப்படுகின்றன. மதுரையிலிருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் குமரி மாவட்டம் அமைந்துள்ளது. இதில் தமிழகத்தின் கேரளா எல்லையான களியக்காவிளை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் சுமார் 300 கி.மீ தொலைவில் வருகின்றன. குமரி மாவட்டத்திலிருந்து அதிகப்படியான மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மதுரையில் உள்ள உயர்நீதிமன்றத்துக்கு வழக்குகள் நிமித்தம் தினசரி சென்று வருகின்றனர். இவ்வாறு சென்று வரும் நபர்களுக்கு சுமார் 250 முதல் 300 கி.மீ தூரம் வரை இருப்பதால் இவர்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

ரயிலில் பயணம் செய்ய விரும்பினால் மதுரைக்கு அலுவல் நேரத்துக்கு (அதாவது காலை 9 மணியளவில்  மதுரையில் இறங்கும் வகையில்) செல்ல எந்த ஒரு ரயில் வசதியும் இல்லை. புனலூர் - மதுரை இரவு நேர பயணிகள் ரயிலில் மட்டுமே செல்ல வேண்டும். இந்த ரயிலில் ஒரு நாளுக்கு முன்பாகவே இரவு புறப்பட்டு மறுநாள் காலையில் மதுரையில் இறங்கி விட்டு அங்கு ரூம் எடுத்து தங்கி விட்டு இரவு அதே ரயிலில் புறப்பட்டு மறுநாள் காலையில் ஊருக்கு வந்து சேருகின்றனர். மதுரைக்கு வழக்கு விஷயமாக செல்ல வேண்டுமென்றால் 2 நாட்கள் வரை ஆகிறது. கார் வசதி கொண்டவர்கள் எளிதில் சென்று விடுகிறார்கள். பஸ்களில் செல்ல வேண்டுமென்றால் கூட, அதிகாலை கிளம்பினால் கூட  அவசர, அவசரமாக செல்ல வேண்டும். திருநெல்வேலியிருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 9.20 மணிக்கு செல்லும்  படியாக திருநெல்வேலி - ஈரோடு / மயிலாடுதுறை பயணிகள் ரயில்  (வண்டி எண் 56826 )  உள்ளது. மறுமார்க்கமும் இதைப் போல் மதுரையிலிருந்து மாலை 5.50 மணிக்கு அதே ரயில் புறப்பட்டு திருநெல்வேலிக்கு இரவு 11.30 மணிக்கு வந்து சேருகிறது. ஆனால் குமரி மாவட்டத்திலிருந்து இதே போல் ஓர் ரயில் சேவை வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இரவு 10.35 மணிக்கு நாகர்கோவிலி–்ல் இருந்து புனலூர் - மதுரை ரயில் திருநெல்வேலி மார்க்கம் புறப்பட்டு சென்று விட்டால் அடுத்து ரயில் காலையில் 6 மணிக்கு நாகர்கோவில் - மும்பை ரயில் உள்ளது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் எட்டு மணி நேரம் எந்த ஒரு ரயில் சேவையும் இல்லை. மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு பகல் நேரத்தில் பயணிக்க வசதிக்காக பல ரயில்கள் உள்ளன. ஆனால் திருவனந்தபுரம் கோட்டத்துக்குட்பட்ட நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி மார்க்கம் பகல் நேரத்தில் பயணிக்க மிக குறைந்த அளவு ரயில்களே உள்ளன. எனவே திருநெல்வேலியில் இருந்து தற்போது மதுரைக்கு அலுவல் நேரத்துக்கு செல்ல வசதியாக இயக்கப்பட்டு வரும் திருநெல்வேலி - ஈரோடு / மயிலாடுதுறை பயணிகள் ரயிலை எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்து வேகத்தை அதிகப்படுத்தி கொச்சுவேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இந்த ரயில் மதுரையில் உள்ள கால அட்டவணையை மாற்றம் செய்யாமல் வேகத்தை அதிகப்படுத்தி இரவு 10 மணிக்கு நாகர்கோவில் வந்து விட்டு, இரணியல், குழித்துறை வழியாக  11.30 மணிக்கு கொச்சுவேலிக்கு வந்து சேருமாறு இயக்க வேண்டும். இதை போல் மறுமார்க்கம் அதிகாலை 3 மணிக்கு கொச்சுவேலியிருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு 4.20 மணிக்கு வந்து மதுரைக்கு 9.20  மணிக்கு போய் செல்லுமாறு இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.

தென் மாவட்ட பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் இருந்து பகல்நேரத்தில் பயணிக்கும் விதத்தில் நெல்லை, மதுரை, திண்டுக்கல், பழநி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு பகல் நேர இன்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு பகல்நேர இன்டர்சிட்டி ரயில் இயக்கப்பட்டால் தென் மாவட்டங்களிலிருந்து கோவை, மதுரை போன்ற பல்வேறு இடங்களுக்கு பல்வேறு பணிகள் நிமித்தம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயில்  நாகர்கோவிலிருந்து அதிகாலை 4 மணிக்கு  புறப்பட்டு மதுரை வழியாக இயக்கப்பட்டால் 9 மணிக்கு மதுரைக்கு சென்று விடும். மறுமார்க்கம் இந்த ரயில் மாலை 6 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் படியாக கால அட்டவணை அமைத்து இயக்கினால் இரவு 11 மணிக்கு நாகர்கோவில் வந்து சேருமாறு இருக்கும். இவ்வாறு இயக்கப்பட்டால் இந்த ரயில் மதுரைக்கு உயர்நீதிமன்றம் நிமித்தம் செல்லும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: