×

சிவகங்கை அருகே அரசு பஸ் திடீர் நிறுத்தம்: இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் மாணவ, மாணவிகள்

சிவகங்கை: சிவகங்கை அருகே அரசுப் பேருந்து திடீரென நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவ, மாணவிகள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை அருகே மல்லல் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 450க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மருதங்குடி, சத்தரசன்கோட்டை, குருந்தன்குளம், கடம்பன்குடி தம்புலிகன்  உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர மானாமதுரையில் இருந்து மல்லல் வரை அரசு   பேருந்து இயக்கப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன் மாலையில் இயங்கி வந்த பேருந்தை வேறு வழித்தடத்திற்கு அதிகாரிகள் திடீரென மாற்றி விட்டதாக தெரிகிறது. இதனால் பள்ளியில் பயிலும் 75க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இலவச பயண அட்டை இருந்தும் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி முடிந்ததும் ஊர்களுக்கு நடந்து செல்கின்றனர்.

சாலை வழியாக சென்றால் சுமார் 4 முதல் 5 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. அதற்கு பதிலாக அப்பகுதியில் உள்ள கண்மாயை கடந்து சென்றால் தூரம் குறையும்  என்பதால் அவ்வழியை பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் ஊர்களுக்கு செல்கின்றனர். கடந்த சில காலங்களாக நல்ல மழை பெய்து வருவதால் கண்மாய் முழுமையாக நிரம்பியுள்ளது. தற்போது மாணவர்கள் தங்களின் இடுப்பளவு தண்ணீர் உள்ள அந்த கண்மாயை கடந்து ஆபத்தான முறையில் வீடுகளுக்கு செல்கின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு  எங்கள் பகுதியில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும் வகையில் மானாமதுரையில் இருந்து அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது மாலையில்  வந்த பேருந்து வராததால் இடுப்பளவு தண்ணீர் உள்ள கண்மாயில் ஆபத்தான முறையில்  வீடுகளுக்கு வருகின்றனர். ஆகையால் மாணவர்களின் இந்த ஆபத்தான பயணத்தை கவனத்தில் கொண்டு மாலையில் நிறுத்திய பேருந்தை திரும்ப இயக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Bus Sudden Stop ,Sivaganga: Student Walking in Extreme Water Sivaganga , Sivaganga
× RELATED புதிய தொழில் முனைவோர் நீட்ஸ்...