சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டு வரும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பு ரத்து

டெல்லி: சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இனி அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1984-ம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபின் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. கடந்த 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபின் எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு,  அனைத்து முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவது என மாற்றியமைக்கப்பட்டது. அந்த வகையில், பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்களின் குடும்பத்தினர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி அதிகாரிகள் பாதுகாப்பளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை எஸ்பிஜி பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், அமைச்சரவைச் செயலாளர், உளவு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தும். அந்த ஆலோசனை கடந்த மே மாதத்தில் நடைபெற்றபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற்று அதற்கு பதிலாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் எஸ்பிஜி பாதுகாப்பையும்  மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி அவர்களுக்கு, எஸ்பிஜி பாதுகாப்பைவிட இசட் பிளஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும்.

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சோனியா, ராகுல்,பிரியங்கா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை விலக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: