×

தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி நீண்ட நாட்கள் ஆகிறது: ரஜினியின் கருத்துக்கு துரைமுருகன் பதிலடி

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி நீண்ட நாட்கள் ஆகிறது என்று, நடிகர் ரஜினிகாந்துக்கு துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல, எனக்கும் பா.ஜ.க. சாயம் பூச முயற்சிகள் நடைபெறுகிறது நடிகர் ரஜினிகாந்த் குற்றம்சாட்டினார். இதில் நானும், திருவள்ளுவரும் சிக்க மாட்டோம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இக்கருத்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், எப்போதும் வெளிப்படையாக தான் பேசுகிறேன் என்றும், தமிழக அரசியலில் ஆளுமையான, சரியான தலைமைக்கு தற்போதும் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது எனவும் கருத்து தெரிவித்தார். இந்நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் ரஜினிகாந்தின் கருத்து குறித்து துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், காவிச்சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என ரஜினிகாந்த் கூறியிப்பது அவரது தனிப்பட்ட கருத்து. வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம். தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை மு.க. ஸ்டாலின் என்ற காற்று நிரப்பி வெகுநாட்களாகிவிட்டது. தொடர்ந்து ரஜினிகாந்த் அரசியலில் இருந்திருந்தால் இது தெரிந்திருக்கும். அவர் அரசியலில் இல்லாததால் அது தெரியவில்லை. தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலை அவருக்கு சரியாக தெரியவில்லை. ரஜினிகாந்த் நேரடியாக அரசியலுக்கு வந்தால் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி வெகு நாட்களாகிவிட்டது என்பதை புரிந்து கொள்வார். ரஜினிகாந்த் மீது யார் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. அவர் யாருக்கு பதில் சொல்லி இருக்கிறார் என்பதும் எங்களுக்கு தெரியாது. ரஜினிகாந்த் கட்சியைத் தொடங்குவேன் என சொல்லியிருக்கிறார். அவர் கட்சியை தொடங்கட்டும் பார்க்கலாம், என்று கூறியுள்ளார்.


Tags : Rajini ,Tamil Nadu ,MK Stalin ,Duraimurugan , Tamil Nadu, verrim, MK Stalin, Rajinikanth, Duraimurugan , DMK
× RELATED ரஜினி பட வில்லனிடம் விவாகரத்து கேட்ட மனைவி