உலக வங்கி கடனுக்காக 10 மாதமாக காத்திருக்கிறது ரூ.1,264 கோடி எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்குவது எப்போது?

மதுரை : எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 10 மாதங்களாகியும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடின்றி உலக வங்கி கடனை எதிர்பார்த்து காத்திருக்கிறது. மத்திய அரசின் 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் “எய்ம்ஸ் மருத்துவமனை” அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 3 ஆண்டு இழுபறியாகி, 2018ல் மதுரை தோப்பூரில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, 2019 ஜனவரி 27ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான மொத்த மதிப்பீடு ரூ.1,264 கோடியாகும்.

224.42 ஏக்கர் பரப்பில் உடனடியாக கட்டுமான பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அடிக்கல் நாட்டி 10 மாதங்களாகியும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.ஏனென்றால் மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. கடந்த ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்ட நிதி ஒதுக்கீடின்றி ஏமாற்றமானது. உலக வங்கியில் கடன் வாங்கி எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த ஜூலையில் உலக வங்கியின் ஜப்பான் நாட்டு குழுவினரும், மத்திய அரசு குழுவினரும் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமையும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தி சென்றனர்.

4 மாதங்களாகியும் இன்னும் கடன் வழங்குவதற்கான அறிகுறிகளை காணோம். இது குறித்து மருத்துவ துறை, தமிழக அரசின் வருவாய் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது வெளியான அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:

உலக வங்கி கடன் வழங்க, அந்த தொகையை குறிப்பிட்ட ஆண்டுக்குள் திருப்பி செலுத்துவதற்கான சாத்திய கூறு. உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது. அந்த நிபந்தனைகளை மத்திய அரசின் சுகாதார துறைக்கு தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான இடத்தை தமிழக அரசு ஒதுக்கிவிட்டது. அதோடு கடமை முடிந்தது என தமிழக அரசு பொறுப்பை தட்டிக்கழிக்கிறது. ஆனால் அருகிலுள்ள தேசிய நான்கு வழிச்சாலையில் இருந்து, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட வளாகம் வரை இணைப்பு சாலை அமைத்து ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசை சார்ந்தது. அந்த இணைப்பு சாலை இன்னும் அமைத்து ஒப்படைக்கப்படவில்லை. இந்த இணைப்பு சாலை அமைத்து முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்பதும் உலக வங்கி குழு நிபந்தனைகளில் ஒன்றாகும்.

எனவே நிபந்தனைகள் நிறைவேற்றிய பிறகு, மீண்டும் உலக வங்கி குழு பார்வையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகே உலக வங்கி கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே அந்த கடன் எப்போது கிடைக்கும்? எப்போது கட்டுமான பணி தொடங்கும்? என்பது நீண்ட கேள்வி குறியாகவே நீடிக்கிறது. இவ்வாறு கூறினர்.

மீண்டும் வழக்கா?

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 10 மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டும்போது, 4 ஆண்டில் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 10 மாதங்கள் முடிந்தன. சமூக ஆர்வலர் ரமேஷ் கூறும்போது, “மத்திய அமைச்சர் திட்டமிட்டபடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கிறார். ஆனால் மத்திய அரசு நிதியோ, உலக வங்கி கடனோ கிடைக்காமல் எப்படி பணிகள் தொடங்கும்? என்ற கேள்விக்கு பதில் இல்லை.

 தகவல் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை, ஏற்கனேவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்த பிறகுதான், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கும் அறிவிப்பு வெளியிட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இன்னும் கட்டுமான பணி தொடங்கவில்லை. கட்டுமான பணிகள் தொடங்காமல் இழுத்தடிப்பது குறித்து மீண்டும் பொதுநல வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.

Related Stories:

>