சேலம் அருகே பஞ்சர் பட்டறையில் கம்ப்ரசர் சிலிண்டர் வெடித்து சிறுவன் கை துண்டிப்பு: 4 பேர் படுகாயம்

சேலம்: சேலம் கந்தன்பட்டியில் லாரி டயருக்கு காற்று பிடித்தபோது, அதிக அழுத்தம் காரணமாக ஏர்- கம்ப்ரசர் வெடித்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தையின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கந்தப்பட்டி பகுதியில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பஞ்சர் பட்டறையில் இன்று காலை கம்ப்ரசர் சிலிண்டர் மூலம் கண்டெய்னர் வாகனத்திற்கு காற்று பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சிலிண்டரில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக பயங்கர சத்தத்தோடு வெடித்து சிதறியது. இதில் சிலிண்டரின் பாகங்கள் கண்டெய்னர் மீதும், அருகிலுள்ள ஓட்டு வீட்டின் மேற்கூரையை துளைத்து கொண்டும் உள்ளே விழுந்தது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த மௌலீஸ்வரன் என்ற சிறுவனின் கை துண்டானது.

இதில் அவனது சகோதரன் ரித்தீஷ், பட்டறை ஊழியர் விஷ்ணுகுமார் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து 5 பேருக்கும் அருகிலுள்ள சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் விரைந்து வந்து இப்பகுதியில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஆயில் இன்ஜின் மூலம் அதிகளவிலான காற்று சிலிண்டருக்குள் செலுத்தப்பட்டதால் வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அருகில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்ற நிலையில் சிலிண்டரின் பாகங்கள் கண்டெய்னரில் பட்டு தடுக்கப்பட்டதால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: