மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : காவிரியின் குறுக்கே கர்நாடகம் மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய கர்நாடக அரசு கால அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே பல அணைகளை கர்நாடகா அரசு கட்டி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா பாசனம் ஆண்டு தோறும் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. கர்நாடக அரசு குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீரை திறந்து விடாததால் தமிழக விவசாயிகள் மிக பெரிய இழப்புகளை சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக எல்லைக்கு மிக அருகில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை ஒன்றை கட்ட கர்நாடக அரசு திட்ட மிட்டுள்ளது.

மிக பிரமாண்டமாக இரு மலைகளுக்கு இடையே கட்ட திட்டமிட்டுள்ள இந்த அணையால் தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வருவது முழுமையாக நின்று விடும் அபாயம் உள்ளது எனவே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி காவிரி நடுவர் மன்றத்திலும் தமிழக அரசு இந்த பிரச்சினையை எழுப்பி உள்ளது. இந்த வழக்கில் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில் மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளோம். இதை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம். இந்த விரிவான திட்ட அறிக்கையையும் வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், தமிழக அரசு அனுமதியில்லாமல் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டோம் என்ற மத்திய அரசின் வாதம் ஏற்புடையதல்ல என்றும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்குவதற்கு முன்பாகவே தமிழக அரசின் கருத்தை கேட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கர்நாடகா அரசு பாசனத்திற்கு இந்த திட்டத்தை பயன்படுத்த உள்ளது, இது காவிரி வழக்கின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு தெரியாமல் அனுமதி அளித்தது தவறு என தமிழக அரசு பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், தமிழக அரசின் மனு இன்றைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கின் விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: