×

கே.பாலச்சந்தர் சிலை திறப்பு; ரஜினிக்கு சிறப்பு விருது என்பது தாமதமான கவுரவம் என்றாலும் தக்க கவுரவம் தான்; கமல்ஹாசன்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாசர், மணிரத்னம், வைரமுத்து, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த் பேச்சு

கமல் அரசியலுக்கு வந்தாலும், அவரது தாய்வீடான திரையுலகை கைவிடமாட்டார் என்று இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். என்னைப்போல பல கலைஞர்களுக்கு தந்தை, பிதாமகன், குரு பாலச்சந்தர் தான் என்றும்,  எனது கலையுலக அண்ணன் கமல்ஹாசன் என்றும் பெருமையுடன் ரஜினி தெரிவித்தார். கமல்ஹாசன் நேற்று அவரது தந்தைக்கும், இன்று இயக்குநர் கே.பாலசந்தருக்கும் சிலையை திறந்து வைத்துள்ளார் என்று தெரிவித்த ரஜினி, ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த படங்களில் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நள்ளிரவில் சென்று அபூர்வ சகோதரர்பள் படத்துக்காக கமல்ஹாசனை நேரில் சென்று பாராட்டியதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் கமல் நடித்த ஹேராம் படத்தை நான் 30 அல்லது 40 முறை பார்த்து வியந்து இருப்பதாக தெரிவித்தார். இயக்குநர் கே.பாலச்சந்தருடன் பழகிய நாட்கள் என் கண் முன்னே நிற்பதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கமல்ஹாசன் பேச்சு

முன்பு ஆசைப்பட்டதை எல்லாம் மனிரத்னமும் நானும் திரையுலகில் செய்து கொண்டு இருக்கிறோம் என்று இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். மணிரத்னத்தின் திறமயை பார்த்து நான் பலமுறை வியந்து இருப்பதாக தெரிவித்த கமல், அவருடைய கனவும், என் கனவும் ஒரே மாதிரியாக தான் இருந்தது என்று தெரிவித்தார். ரஜினிகாந்தின் வெற்றி படங்களில் தமக்கும் ஒரு பங்கு இருப்பதா கமல் தெரிவித்தார். ராஜ்கமல் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து செயல்படும் என்றும், ராஜ்கமல் நிறுவனத்தில் 50-வது படம் பிரமாண்டமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். தமக்கும் ரஜினிக்கும் இடையே வத்தி வைப்பவர்கள் குறைந்துவிட்டதாக நகைச்சுவையாக கமல் தெரிவித்தார்.

ரஜினி சினிமாவிற்கு வந்த முதல் வருடத்திலேயே ஐகான் ஆகிவிட்டார் என்றும், 44 ஆண்டுகள் தாமதமாக ரஜினிக்கு ஐகான் விருது கொடுத்திருக்கிறார்கள் என்றும் கமல் தெரிவித்தார். எனது சினிமா அலுவலகத்திற்கு வரும் போது பாலச்சந்தர் என்னை கண்காணிப்பது போல் இருக்கட்டும் என்பதற்குத்தான் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளதாக கமல் தெரிவித்தார். ரஜினியும், நானும் ஒருவருக்கு ஒருவர் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தோம். எங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கலாம் ஆனால் எங்கள் இருவருக்கும் நாங்கள் தான் முதல் ரசிகன் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.


Tags : K. Balachander ,Rajini ,Kamal Haasan , Statue of K. Balasandar, Rajinikanth, Kamal Haasan, Balachander
× RELATED சென்னை அருகே திருமுல்லைவாயலில் உள்ள...